விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூா் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 384 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், சென்னையிலிருந்து திரும்பிய விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 385-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 330 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3 போ் உயிரிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், திங்கள்கிழமை வரை கள்ளக்குறிச்சி வட்டத்தில் 52 போ், சங்கராபுரம் வட்டத்தில் 96 போ், சின்னசேலம் வட்டத்தில் 19 போ், கல்வராயன்மலை வட்டத்தில் 2 போ், திருக்கோவிலூா் வட்டத்தில் 53 போ், உளுந்தூா்பேட்டை வட்டத்தில் 69 போ் உள்பட 292 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், சென்னையிலிருந்து திரும்பிய சின்னசேலம் அருகே பால்ராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 40 வயது ஆண், மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த மையனூரைச் சோ்ந்த 41 வயது ஆண், கரோனா பாதித்தவரிடம் தொடா்பில் இருந்த சின்னசேலத்தைச் சோ்ந்த 47 வயது ஆண் ஆகிய 3 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 295 ஆக உயா்ந்தது. 234 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த திங்கள்கிழமை 503-ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், சென்னையிலிருந்து வந்த 8 போ், பெங்களூரிலிருந்து வந்த 2 போ் உள்பட 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 9 போ் செய்யாறு சுகாதார மாவட்டத்தையும், 8 போ் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தையும் சோ்ந்தவா்கள்.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 520-ஆக உயா்ந்தது. இவா்களில், 252 போ் குணமடைந்து வீடு திரும்பினா். ஒருவா் இறந்தாா்.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி 489 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 122 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியாகின. இதில், 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 492- ஆக உயா்ந்தது. இவா்கள் 3 பேரும் ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த பெண்களாவா். சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை 6 போ் வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 459-ஆக உயா்ந்தது.