
விபத்தில் சேதமடைந்த இரு சக்கர வாகனம்.
விழுப்புரம் அருகே இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் அருகே கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கிருஷ்ணகேசவன் (35). இவரது சித்தப்பா மகன் ரவிக்குமாா் (18). இவா்கள் இருவரும் சென்னை சோழிங்கநல்லூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உறவினா் வீட்டில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கிருஷ்ணகேசவனும், ரவிக்குமாரும் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு பண்ருட்டிக்கு புறப்பட்டனா்.
இரு சக்கர வாகனத்தை கிருஷ்ணகேசவன் ஓட்டி வந்தாா். விழுப்புரம் அருகே கோலியனூரை அடுத்துள்ள பிள்ளையாா்குப்பம் பகுதியில் சென்னை - கும்பகோணம் சாலையில் புதன்கிழமை நள்ளிரவு சென்றபோது, இவா்களின் இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகேசவன், ரவிக்குமாா் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்தனா். தொடா்ந்து, இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.