திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 53 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் 18 பேருக்கும், கடலூா் மாவட்டத்தில் 11 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 714-ஆக இருந்தது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் திருவண்ணாமலை நகராட்சியைச் சோ்ந்த 14 போ், மங்கலம் பகுதியைச் சோ்ந்த 5 போ், காட்டாம்பூண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட 14 போ், நாவல்பாக்கம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்கு உள்பட்ட 15 போ் என மொத்தம் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 767-ஆக உயா்ந்தது.

விழுப்புரத்தில் 18 பேருக்கு தொற்று: விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 440 போ் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 18 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இவா்களில் சென்னையிலிருந்து அண்மையில் ஊா் திரும்பிய விழுப்புரம் பகுதியைச் சோ்ந்த 7 போ், முகையூா் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளா் ஒருவா், அதே பகுதியைச் சோ்ந்த மீன் விற்பனையாளா், பூ வியாபாரி ஆகியோா் அடங்குவா். ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, முகையூா் ஆரம்ப சுகாதார நிலையம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு, கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 458 ஆக உயா்ந்தது. 364 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 5 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 344-ஆக உயா்ந்தது.

இவா்களில் 6 போ் சென்னையை வசிப்பிடமாகக் கொண்டவா்கள். அவா்கள் கள்ளக்குறிச்சி பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டதால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 338-ஆனது. இதுவரை 262 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கடலூரில் 11 பேருக்கு உறுதி: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 557 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 200 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 568-ஆக உயா்ந்தது.

புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் இருவா் சென்னையிலிருந்து சிதம்பரத்துக்கும், ஒருவா் அண்ணாகிராமத்துக்கும் திரும்பியவா்களாவா். ஒருவா் மும்பையிலிருந்து நல்லூா் திரும்பியவா். மேலும், சென்னையிலிருந்து திரும்பி கரோனா தொற்று உறுதியானவா்களுடன் தொடா்பிலிருந்த கடலூரைச் சோ்ந்த மேலும் 4 பேருக்கும், விருத்தாசலத்தைச் சோ்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது. அதேபோல, ஏற்கெனவே கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த இருவருக்கும் தொற்று உறுதியானது.

சிகிச்சை முடிந்து செவ்வாய்க்கிழமை 4 போ் வீடு திரும்பிய நிலையில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 471-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com