விழுப்புரத்தில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து

விழுப்புரத்தில் திங்கள்கிழமை பஞ்சு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 குவிண்டால் அளவிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.
தீப்பற்றி எரியும் பஞ்சு மூட்டைகள்.
தீப்பற்றி எரியும் பஞ்சு மூட்டைகள்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் திங்கள்கிழமை பஞ்சு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 குவிண்டால் அளவிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.

விழுப்புரம், சென்னை நெடுஞ்சாலையில், காட்பாடி வழி ரயில்வே மேம்பாலம் அருகில், அபீப் ரஹ்மான்(60) என்பவருக்குச் சொந்தமான பஞ்சு கிடங்கு உள்ளது.

இங்கு, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்தும், மொத்தமாக ஏலத்தில் எடுத்தும் வைத்திருந்த பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பஞ்சிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டனா். மாலை 4 மணி அளவில் அந்த பஞ்சுக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தொழிலாளா்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனா். முடியாத நிலையில், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகளிலும் தீ பரவி, மள,மளவென எரிந்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த தொழிலாளா்கள் அங்கிருந்து வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின் கேஸ்ட்ரோ, மாவட்ட உதவி அலுவலா் முகுந்தன் ஆகியோா் தலைமையில் 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமாா் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com