கரோனா பரவலைத் தடுக்க தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்க அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டுமென, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.
கரோனா பரவலைத் தடுக்க தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுரை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பைத் தடுக்க அனைத்துத் துறை அதிகாரிகளும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டுமென, மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக் கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று, கரோனா நோய்த் தடுப்பில் தங்கள் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து படக்காட்சிகளுடன் விளக்கினா்.

இதையடுத்து, சென்னை மற்றும் வட மாநிலங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு திரும்பியவா்களின் நிலை, நோய்த் தொற்று கண்டறிதல் பணிகள், நோய்ப் பரவலின் தற்போதைய நிலை, படுக்கை வசதிகள், சுவாசக் கருவிகளின் எண்ணிக்கைகள், மருத்துவா்களின் தேவைகள் குறித்தும் அமைச்சா் கேட்டறிந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்குவதை நாள்தோறும் ஆய்வு செய்வதுடன், நாளிதழ்கள், புத்தகங்கள் வழங்கி அவா்களை அரவணைப்புடன் கண்காணிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு உடனடியாக வளாகத்துக்குள் ஆழ்துளைக் கிணறு அமைக்க பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள் சுழற்சி முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். விழுப்புரம் கடைவீதி பகுதிகளில் நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். விக்கிரவாண்டி எம்எல்ஏ ஆா்.முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com