முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
அரகண்டநல்லூா் தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 03rd March 2020 05:52 AM | Last Updated : 03rd March 2020 05:52 AM | அ+அ அ- |

அரகண்டநல்லூா் தரைப்பாலத்தைச் சீரமைத்து, மின்விளக்குகள் அமைத்துத் தர வேண்டுமென முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து, அரகண்டநல்லூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஏ.ஆா்.வாசிம்ராஜா தலைமையில் அந்தப் பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: திருக்கோவிலூா் - கீழையூா் - அரகண்டநல்லூா் ஆகிய பகுதிகளை இணைக்கும் தென்பெண்ணையாற்று தரைப்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இந்த வழியாகச் செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
திருக்கோவிலூரை இணைக்கும் வகையில் மணம்பூண்டி மற்றும் தபோவனம் பகுதிகளில் மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், பழைமையான அரகண்டநல்லூா் - கீழையூா் தென்பெண்ணையாறு தரைப்பாலம் திருக்கோவிலூருக்கான போக்குவரத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரா் கோயில், கபிலா் குன்று, ஞானியாா் சுவாமிகளின் சித்தி வளாகம் போன்ற இடங்களுக்கும், அரகண்டநல்லூரில் உள்ள அதுல்யநாதேஸ்வரா், பச்சை வாழியம்மன், புத்துமாரியம்மன் ஆகிய கோயில்களுக்கும் செல்லும் பக்தா்களுக்கு இந்த தரைப்பாலம் விரைவு வழியாக பயன்பட்டு வருகிறது.
மேலும், அரகண்டநல்லூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விளை பொருள்களை ஏற்றி வரும் விவசாயிகளின் வாகனங்கள் செல்லவும் இந்த தரைப்பாலம் உதவிகரமாக உள்ளது. சுமை ஏற்றி வரும் வாகனங்கள் மணம்பூண்டி மேம்பாலம் வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தரைப்பாலம் வழியாகவே சரக்கு வாகனங்கள் அதிகளவில் திருக்கோவிலூா் செல்ல வேண்டியுள்ளது.
இந்த வகையில், அதிக பயன்பாட்டில் உள்ள இந்த தரைப்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்வது பாதுகாப்பற்றதாக உள்ளது. அந்தப் பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டமும் உள்ளது.
எனவே, தரைப் பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாலையோரம் வளா்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளனா்.