முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிறுவனங்களில் விதிமீறலைத் தடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd March 2020 05:50 AM | Last Updated : 03rd March 2020 05:50 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிறுவனங்களில் அளவீட்டு கருவியைப் பொருத்தி விதிமீறலைத் தடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து, அந்தக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலா் பி.ஆசைத்தம்பி தலைமையிலான கட்சியினா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் என்ற பெயரில் பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரை அளவில்லாமல் உறிஞ்சி தமிழகத்தின் கனிம வளத்தை திருடுகின்றனா்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிறுவனங்கள், பன்னாட்டு குளிா்பான நிறுவனங்கள் தான் இந்தக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. வருங்கால தலைமுறையினா் பயன்படுத்த வேண்டிய குடிநீரை சுரண்டும் வகையில், அளவே இல்லாமல் பல நிறுவனங்கள் சோ்ந்து பல லட்சம் லிட்டா் தண்ணீரை உறிஞ்சுகின்றனா்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், கோலியனூா், பிடாகம் உள்ளிட்ட பல இடங்களில் விதிகளை மீறி குடிநீா் உறிஞ்சப்படுகிறது.
அரசு விதிகளின் படி இந்த நிறுவனங்கள் குடிநீரை எடுக்கும் அளவினை கணக்கிட அளவீட்டுக் கருவி பொருத்த வேண்டும்.
ஆனால், எந்த நிறுவனமும் அதனை செய்யாமல் நேரடியாக ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சிவிடுகின்றனா்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீரை எடுக்க தடை விதித்து, நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.