முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மாற்றுத்திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்
By DIN | Published On : 03rd March 2020 11:37 PM | Last Updated : 03rd March 2020 11:37 PM | அ+அ அ- |

விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தின் முன்பு நூறு நாள் வேலைக் கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
விக்கிரவாண்டி வட்டாரத்தில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்க மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி தலைமையில், முண்டியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு வந்தனா்.
பின்னா், அவா்கள் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்க மனு கொடுத்து பல மாதங்களாகியும் பணி வழங்கவில்லை என முறையிட்டனா். விசாரித்த வட்டார வளா்ச்சி அலுவலா் நாராயணன், விரைவில் பணி வழங்குவதாகத் தெரிவித்தாா்.
அப்போது, ஊரக வேலைத் திட்டத்தில் தினசரி 4 மணி நேரம் வேலையும், கூலியாக ரூ.229 வழங்க வேண்டும் என்று அரசாணையில் கூறியிருந்தும், நிகழாண்டு 30 நாள்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாக அதிருப்தி தெரிவித்தனா்.
பின்னா், வெளியே வந்த அவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி, மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதை ஏற்று மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து சென்றனா்.