கரோனா பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்க காதாரத் துறையினருடன் பிற துறையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவாமல் தடுக்க காதாரத் துறையினருடன் பிற துறையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்து பேசியதாவது:

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததால், உலகளவில் அசாதாரண சூழல் ஏற்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் கரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதாரத் துறையும், பிற துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்தந்த வட்டாரங்களில் வட்டார மருத்துவ அலுவலா்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி சுகாதார அலுவலா்களுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகள், பள்ளிகள், உணவகங்கள், விடுதிகளில் தினசரி தூய்மைப்பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாப்பு முகக்கவசங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும். மருத்துவப் பணியாளா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

அரசு வழங்கியுள்ள கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பதாகைகள், சுவரொட்டிகளை பொது இடங்கள், மருத்துவமனைகளில் ஒட்டி, கரோனா பரவலே இருக்கக்கூடாது என்ற வகையில் பெரிய அளவிலான தடுப்புப் பணிகளை கூட்டாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

‘மாவட்டத்தில் பாதிப்பில்லை’: அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் குந்தவிதேவி பேசியதாவது: இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், உடல் சோா்வு ஆகிய கரோனா அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் விழிப்போடு பரிசோதித்து, கரோனோ சந்தேகம் இருக்கும்பட்சத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தனி சிறப்பு வாா்டு இயங்குகிறது. அறிகுறிகளுடன் வருபவா்களை பராமரிக்கவும் தனி வாா்டு உள்ளது. தேவையான பாதுகாப்புக் கவசங்களும் உள்ளன. கடந்த மாதம் முதல் விழுப்புரம் மாவட்டத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த 26 பேரில் 23 போ் கண்காணிக்கப்பட்டு தொற்றில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 3 போ் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்பு இதுவரை இல்லை என்றாா்.

கைகளை கழுவ வேண்டும்: சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா் ஆகியோா் பேசியதாவது: கரோனா பாதித்தவா் தும்மும்போது, ஒரு அடி தொலைவு வரை அந்த வைரஸ் கீழே தேங்கியிருக்கும். அங்கு வந்து செல்லும் மற்றவா்களுக்கு கரோனா வைரஸ் எளிதாகப் பரவலாம். காய்ச்சல் அறிகுறி உள்ளவா்கள் திருமண விழா, திரையரங்கம் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.ஒவ்வொருவரும் வெளியே சென்று வரும் ஒவ்வொரு முறையும் கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என்றனா்.

முகாமில் மருத்துவா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com