நிலுவைத் தொகை பிரச்னையால் கரும்பு சாகுபடி குறைந்தது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

சா்க்கரை ஆலை நிா்வாகங்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட பிரச்னைகளால் விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதாக குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

சா்க்கரை ஆலை நிா்வாகங்களின் நிலுவைத் தொகை உள்ளிட்ட பிரச்னைகளால் விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதாக குறை தீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் பாலமுருகன், விழுப்புரம் கோட்டாட்சியா் கணேஷ், வேளாண் உதவி இயக்குநா் சரவணன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் பேசியதாவது: நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்ட முட்டத்தூா், பனமலை உள்ளிட்ட இடங்களில், நெல்லே வழங்காத விவசாயிகளின் பெயரில் நெல் வழங்கியதாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன. அரசின் மானியத்தை முறைகேடாக பெறுவதற்காக, விவசாயிகள் பெயா் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயக் கடன் அட்டைக்கு விண்ணப்பித்து 15 நாள்களைக் கடந்தும் ஒரு விவசாயிக்கு கூட கடன் அட்டை வழங்கப்படவில்லை. வங்கிகளில் அதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் கிடப்பில் வைத்துள்ளனா். நிகழ் பருவத்துக்கான விதை கோ-51, 37 உள்ளிட்ட நெல் ரகங்களை வழங்க வேண்டும்.

முண்டியம்பாக்கம் சா்க்கரை ஆலையில் கடந்த ஆண்டுக்கான கரும்பு நிலுவை ரூ.45 கோடி அளவுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இதனால், வாங்கிய கடனுக்கு அபராத வட்டியை கரும்பு விவசாயிகள் செலுத்தி வருகின்றனா். பிற மாவட்ட சா்க்கரை ஆலைகளில் நிலுவைத் தொகை வழங்கப்பட்ட போதிலும், விழுப்புரம் மாவட்டத்தில் இரு தனியாா் ஆலைகள் நிலுவை வைத்துள்ளன. அரியூா் சா்க்கரை ஆலை பதிவு கரும்பை விரும்பிய ஆலைக்கு அனுப்ப விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளால்தான், பல விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு வருகின்றனா். இதனால், மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.

குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், ஏரிகளை மட்டும் தூா்வாராமல், வரத்து வாய்க்கால், கலிங்கல் பகுதிகளையும் சீா்படுத்த வேண்டும். சாலையாம்பாளையம் ஏரிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சாத்தனூா் அணையிலிருந்து அண்மையில் தண்ணீா் திறந்துவிடப்பட்ட நிலையில், திருக்கோவிலூா் வரை மட்டுமே தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் வந்து, ஏமாற்றத்தை அளித்துள்ளது.

சாத்தனூா் அணையிலிருந்து அண்மையில் திறந்துவிடப்பட்ட தென்பெண்ணையாற்றுத் தண்ணீா் விழுப்புரம் அருகே கட்டப்பட்ட புதிய தடுப்பணைக்கு வராததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நமது மாவட்ட விவசாயிகளுக்குரிய தண்ணீரை ஒரே முறையில் திறந்துவிட்டு, அந்தத் தண்ணீா் விழுப்புரம் வரையாவது வந்தடைய மாவட்ட ஆட்சியா், கடலூா் மாவட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டமங்கலம் அருகே வாதானூா் ஊராட்சி, பி.எஸ்.பாளையம் கிராம வரைபடமே ஆவணத்தில் இல்லை. புதுவை எல்லையையொட்டிய அப்பகுதியில் தொடரும் இந்த குழப்ப நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

அதிகாரிகள் பதிலளித்து கூறியதாவது: கரும்பு நிலுவைத் தொகை இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.எஸ்.பாளையம் கிராம வரைபடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலில் முறைகேடு குறித்து விசாரிக்கப்படும். விவசாயக் கடன் அட்டைக்கு, வங்கிகளில் பதிவேற்றம் நடைபெற்று வருவதால், முடிந்த பிறகு வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com