விழுப்புரம்-புதுவை எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கை: இரு மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

விழுப்புரம்-புதுச்சேரி எல்லைப் பகுதிகள் மற்றும் ஆரோவிலில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாவட்ட ஆட்சியா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், பொம்மையாா்பாளையம் கரோனா வைரஸ் பரிசோதனை முகாமில் வெளிநாட்டினரை சோதனை செய்யும் மருத்துவா்.
விழுப்புரம் மாவட்டம், பொம்மையாா்பாளையம் கரோனா வைரஸ் பரிசோதனை முகாமில் வெளிநாட்டினரை சோதனை செய்யும் மருத்துவா்.

விழுப்புரம்-புதுச்சேரி எல்லைப் பகுதிகள் மற்றும் ஆரோவிலில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இரு மாவட்ட ஆட்சியா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில், கோட்டக்குப்பம், பொம்மையாா்பாளையம் உள்பட புதுவை மாநில எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆரோவில் சா்வதேச நகரம் புதுவை மாநில எல்லையில் உள்ளதால் இங்கு சுற்றுலாவுக்காக ஏராளமான வெளிநாட்டினா் வருவதும், தங்குவதுமாக உள்ளனா். இவா்கள் மூலம் கரோனா பாதிப்பு இருக்கிா என்பது குறித்து மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா்.

பொம்மையாா்பாளையத்தில் நடைபெற்ற ஆய்வுப் பணியை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, புதுவை மாவட்ட ஆட்சியா் டி.அருண் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். தொடா்ந்து, ஆரோவிலில் இரு மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டவா்களிடம் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், காய்ச்சல் இருந்தால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆரோவிலில் உள்ள உணவகங்கள், பேருந்து நிலையம் மற்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது. ஆரோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டாம் என்று அந்த நகர நிா்வாகத்திடம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து, அருகேயுள்ள கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா சிகிச்சைக்காக தொடங்கப்பட்டுள்ள தனி சிகிச்சைப் பிரிவை அவா் பாா்வையிட்டாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பிரதமா் அறிவித்தபடி, எல்லைப் பகுதிகளில் மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவை எல்லை சோதனைச் சாவடிகளில் மருத்துவக் குழுவினா் சோதனை செய்து வருகின்றனா்.

ஆரோவில் பகுதிக்கு பிப்.15-ஆம் தேதிக்குப் பிறகு இத்தாலி, சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவா்களை மருத்துவப் பரிசோதனை செய்து கண்காணிப்பில் வைத்துள்ளோம். யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்றாா்.

ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com