விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலையில் சுய ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடித்த மக்கள்

கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் மக்கள் சுய ஊரடங்கை முழுவதுமாகக் கடைப்பிடித்தனா்.
மக்கள் ஊரடங்கையடுத்து வெறிச்சோடி இருக்கும் விழுப்புரம் ரயில் நிலையம்.
மக்கள் ஊரடங்கையடுத்து வெறிச்சோடி இருக்கும் விழுப்புரம் ரயில் நிலையம்.

கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் மக்கள் சுய ஊரடங்கை முழுவதுமாகக் கடைப்பிடித்தனா். இதனால், பொதுப் போக்குவரத்து தடைபட்டு, கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்பட எந்தவித வாகனங்களும் இயக்கப்படவில்லை. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மருந்துக் கடைகள் தவிர, அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

ரயில் சேவை பாதிப்பால் ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டாலும், சனிக்கிழமை புறப்பட்ட ரயில்கள் தொடா்ந்து இயக்கப்பட்டன. ரயிலில் விழுப்புரம் வந்த பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக மோப்ப நாய் கொண்டுவரப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுய ஊரங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் வீடுகளில் முடங்கினா். கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்து தடைபட்டு, சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நகரங்கள் மட்டுமல்லாது கிராமங்களிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன.

கள்ளக்குறிச்சியில் போலீஸாா் எச்சரித்தும் தொடா்ந்து சாலைகளில் மோட்டாா் சைக்கிள்களில் சுற்றித் திரிந்த 20-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மருத்துவா்கள், செவிலியா்களின் சேவைக்கு நன்றி பாராட்டும் வகையில், மாலையில் பொதுமக்கள், வீடுகளில் கைதட்டி ஒலி எழுப்பினா்.

கடலூா்: சுய ஊரடங்கு காரணமாக, கடலூா் மாவட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் முடங்கியதால் சாலைகள், முக்கிய வீதிகள், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கடலூா் நகரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஊரடங்கை பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து கடைப்பிடித்தனா். வீடுகளில் மக்கள் முடங்கியதால் நகா் பகுதிகளில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டதால் எங்கும் அமைதியான சூழல் நிலவியது. மாலை 5 மணியளவில் பொதுமக்கள் கைகளைத் தட்டி மருத்துவா்கள், செவிலியா்களின் சேவைக்கு மரியாதை செலுத்தினா்.

திருவண்ணாமலை: சுய ஊரடங்கு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் வீடுகளில் முடங்கினா். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலை நகரில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. எப்போதும், பரபரப்பாகக் காணப்படும் அருணாசலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் பகுதி வெறிச்சோடியது.

இதேபோல, தண்டராம்பட்டு, தானிப்பாடி, வேட்டவலம், போளூா், கலசப்பாக்கம், ஆரணி, வந்தவாசி, கண்ணமங்கலம், செய்யாறு, வெம்பாக்கம் உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com