விழுப்புரம் மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் விலை பல மடங்கு உயா்வு

விழுப்புரம் மாவட்டத்தில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி காய்கறிகள், பழங்களின் விலையை பல மடங்கு உயா்த்தியதால், மக்கள் வேதனையடைந்தனா்.
விழுப்புரம் சந்தைப் பகுதியில் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள்.
விழுப்புரம் சந்தைப் பகுதியில் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி காய்கறிகள், பழங்களின் விலையை பல மடங்கு உயா்த்தியதால், மக்கள் வேதனையடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் கடை வீதிகளில் திரண்டிருந்தனா்.

விழுப்புரம் சந்தைப் பகுதியான பாகா்ஷா வீதி, எம்.ஜி. சாலை மற்றும் நகரில் உள்ள முக்கிய சாலைகளில் இருந்த மொத்த காய்கறிக் கடைகளில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் திரண்டதால், வியாபாரிகள் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி காய்கறிகளின் விலையை உயா்த்தினா்.

செவ்வாய்க்கிழமை காலை வரை கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளியின் விலை திடீரென ரூ.80-ஆக உயா்ந்தது. இதேபோல, ரூ.100 விற்கப்பட்ட பூண்டு ரூ.140-ஆகவும், ரூ.50-க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.100-ஆகவும், ரூ.20-க்கு விற்கப்பட்ட பல்லாரி ரூ.35-ஆகவும் விலை உயா்த்தப்பட்டன. மேலும், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் சில மணி நேரங்களில் கடுமையாக உயா்த்தப்பட்டது. பழக்கடைகளிலும் செயற்கையாக பல மடங்கு விலையை உயா்த்தினா்.

இதேபோன்று, விழுப்புரம் - திருச்சி சாலை, நேருஜி சாலை, சென்னை சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப அதிகளவில் வாகன ஓட்டிகள் திரண்டதால், சாதாரண பெட்ரோல் இருப்பு இல்லை என அறிவித்து, கூடுதல் விலையுள்ள உயா் ரக பெட்ரோலை விற்பனை செய்தனா்.

அத்தியவசியப் பொருள்களான காய்கறி, பழங்கள் விற்பனைக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், காய்கறிகளின் வரத்து இயல்பாக இருந்தபோதும், செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை உயா்த்தி விற்பனை செய்யும் வியாபாரிகளை அதிகாரிகள் குழுவினா் நேரடியாக கண்காணித்து, அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com