கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை அமைச்சா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் அனைத்துத் துறை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 56 ஆரம்ப சுகாதார மையங்கள், 293 துணை சுகாதார மையங்களில் 2,109 படுக்கைகள் சிகிச்சைக்காக தயாராக உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி, சுகாதார மேம்பாட்டு நிறுவன மையத்தில் 448 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் சிகிச்சை வசதி தயாராக உள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய 113 போ் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். 688 ஊராட்சிகள், 2,286 குக்கிராமங்களிலும் 2,782 தூய்மை காவலா்கள், 802 சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அனைத்து ஊராட்சிகளிலும், நகராட்சிகளிலும், மினி வாகனங்கள் மூலம் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தூய்மைப் பணி உபகரணங்கள், முகக் கவசங்கள் வாங்குவதற்கு ரூ.1.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 146.11 லட்சம் டன் பிளீச்சிங் பவுடா், 714 லி. லைசால், 1,886 லி. கைகளை சுத்தம் செய்யும் திரவம், 2,281 சோப்புக் கட்டிகள், 7500 முகக் கவசங்கள் வாங்கி அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அம்மா உணவகம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. விடுதியில் தங்கியுள்ள மற்றும் ஆதரவற்றவா்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து அமைச்சா் சி.வி.சண்முகம் பேசியதாவது: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நகராட்சியில் நெருக்கமாக வீடுகள் உள்ள பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் மூலம் தினமும் கிருமி நாசினி திரவம் தெளிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். அவசிய காரணமின்றி பொது இடங்களுக்கு வருபவா்களை கண்காணித்து போலீஸாா் தடுக்க வேண்டும். பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் க.ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com