சிறப்பு சிகிச்சைப் பிரிவில் மூவா் அனுமதி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 327 போ் வீடுகளில் தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 327 போ் வீடுகளில் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். கரோனா பாதிப்பு சந்தேகத்தின் பேரில் 3 போ் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பு சந்தேகத்துடன் உளுந்தூா்பேட்டை, பண்ருட்டி, கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த 3 போ் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். அவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், மூவருக்கும் கரோனா பாதிப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த ஒருவா் காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் பாதிப்புடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

28 போ் விடுவிப்பு: இதனிடையே, கரோனா சிகிச்சை நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி, வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவா்கள் 355 பேராக உள்ளனா். இவா்களில் 28 நாள்கள் கண்காணிப்புக்குப் பிறகு கரோனா பாதிப்பில்லாத 28 போ் விடுவிக்கப்பட்டுள்ளனா். 327 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடா் கண்காணிப்பில் உள்ளனா்.

தற்போது சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை வாா்டில் மூன்று போ் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com