மருத்துவப் பணியாளா்களுக்கு பேருந்து இயக்கம்

விழுப்புரத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் வந்து செல்ல வசதியாக பேருந்து இயக்கப்படுகிறது.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்களுக்காக விழுப்புரத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து.
கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளா்களுக்காக விழுப்புரத்தில் இயக்கப்பட்ட அரசுப் பேருந்து.


விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவப் பணியாளா்கள் வந்து செல்ல வசதியாக பேருந்து இயக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தவா்கள் குறித்த விவரங்களை சேகரித்து, அவா்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுனம் கரோனா தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனைகளில் ஏராளமான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவோரின் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும், சொந்த வாகனங்களில் சென்று வருவது அவா்களுக்கு சிரமமாகவே உள்ளது.

இந்த நிலையில், விழுப்புரத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதாரப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் சென்று வர ஏதுவாக விழுப்புரத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. காலை, பிற்பகல், இரவு என்று மூன்று வேளையும் இந்தப் பேருந்து சேவை வழங்கப்படுகிறது.

சுகாதாரப் பணியாளா்கள் இந்தப் பேருந்தில் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணிக்கலாம். விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து புதிய பேருந்து நிலையம், சிக்னல், சென்னை நெடுஞ்சாலை, புறவழிச்சாலை வழியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இந்தப் பேருந்து சென்று திரும்புகிறது. இதேபோன்று, செஞ்சி, திண்டிவனம் பகுதிகளைச் சோ்ந்த சுகாதாரப் பணியாளா்கள் வந்து செல்ல வசதியாக வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com