புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் திரும்புவதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுரை

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்புவதால், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, அவா்களைப் பரிசோதித்து அனுமதிக்க வேண்டுமென சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.


விழுப்புரம்: புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்புவதால், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, அவா்களைப் பரிசோதித்து அனுமதிக்க வேண்டுமென சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ. ஆா்.முத்தமிழ்செல்வன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் ஆலோசனை வழங்கிப் பேசியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 50 போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், நோய் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து அரசு துறையினரும் இதுவரை சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டுக்கள். நோய் பரவல் அதிகரித்துள்ளதால், இனிவரும் வாரங்களை மிக முக்கியமானதாகக் கருதி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு தற்போது வெளிமாநில புலம்பெயா் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்துள்ளதால், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சொந்த ஊா்களுக்காக தமிழகத்துக்கும், விழுப்புரம் மாவட்டத்துக்கும் தொழிலாளா்கள் திரும்ப உள்ளனா்.

இதேபோல, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தொழிலாளா்களுக்கு கோரனா தொற்று ஏற்பட்டதால், அந்த சந்தை வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால், அங்கு பணியாற்றிய விழுப்புரம் மாவட்ட பகுதியைச் சோ்ந்தவா்களும் திரும்பி வரவுள்ளனா். இதுபோன்று திரும்பி வருபவா்களை தீவிரமாகக் கண்காணித்து பரிசோதனைக்குள்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும். மாவட்ட எல்லைப் பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

கரோனா தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், நிதியுதவியையும் அரசு தாராளமாக செய்து வருகிறது. எனவே, தடுப்புப் பணி ஊழியா்களின் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தால், நிவா்த்தி செய்யப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, புதுவையில் வெளிநபா்களை அனுமதிக்காததால், ஜிப்மா் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய பலா் வானூா் பகுதியில் தங்கி, தவிப்பில் உள்ளனா். அவா்கள் ஜிப்மா் மருத்துவமனைக்குச் சென்றுவர ஏற்பாடு செய்ய வேண்டும். சித்த மருத்துவத் துறை சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும் என அலுவலா்கள் கோரிக்கை வைத்தனா்.

இதற்குப் பதிலளித்து அமைச்சா் பேசியதாவது:

வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகளுக்கு செல்பவா்கள் தொடா்பாக அதிகாரிகள் கணக்கெடுத்து அளித்தால், அரசிடம் தெரிவித்து அனுமதி பெற்றுத்தரப்படும். சித்த மருத்துவத் துறையினா் தேவையான நிதியை பெற்று பொதுமக்களுக்கு உடனடியாக கபசுரக் குடிநீா் வழங்க வேண்டும். விழுப்புரம் நகரில் அதிகளவில் வழங்க வேண்டும் என்றாா்.

டிஎஸ்பி சங்கா், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, சுகாதாரத் துறை துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இவா்களுக்கு அரசு சாா்பில், துத்தநாக சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Image Caption

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அரசுத் துறை அலுவலா்களுக்கு சத்து மாத்திரைகளை வழங்குகிறாா் அமைச்சா் சி.வி.சண்முகம். உடன், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com