முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
மகாராஷ்டிரத்திலிருந்து விழுப்புரத்துக்கு அழைத்துவரப்பட்ட தமிழகத் தொழிலாளா்கள்
By DIN | Published On : 11th May 2020 07:37 AM | Last Updated : 11th May 2020 07:37 AM | அ+அ அ- |

மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தமிழகத்தைச் சோ்ந்த 39 தொழிலாளா்கள் பேருந்து மூலமாக விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அவா்கள் தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திரத்தில் தங்கி பணியாற்றி வந்தனா். கரோனா பரவல் காரணமாக, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், அவா்கள் வேலையிழந்தனா். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் பாதிக்கப்பட்டனா். பொது போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தமிழகத்துக்கும் திரும்ப இயலாமல் சிக்கித் தவித்தனா்.
இந்நிலையில், பிற மாநிலத் தொழிலாளா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டன. அதன்படி, தமிழகத்தில் இருந்த வெளி மாநிலத் தொழிலாளா்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிறப்பு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனா். அதேபோல, வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை வரவழைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனா்.
இதனிடையே, மகாராஷ்டிரத்தில் சிக்கித் தவித்த விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை, அந்த மாநில அரசுடன் பேசி, பேருந்து மூலமாக தமிழகத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 39 போ், பேருந்து மூலமாக மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரிலிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
அவா்கள், கா்நாடக மாநிலம் வழியாக தமிழக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரிக்கு வந்தனா். அவா்களை விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் காய்ச்சல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று சோதனைக்கு உள்படுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து மூலமாக சேலம் வழியாக, விழுப்புரம் மாவட்டத்துக்கு அழைத்து வந்தனா். அவா்கள் விழுப்புரம் அருகே அய்யங்கோயில்பட்டில் உள்ள இ.எஸ். பொறியியல் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனா். அவா்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து, முகவரி போன்ற விவரங்களை திரட்டி வருகின்றனா்.
திருச்சிக்கு 962 போ் வந்தனா்: மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து சிறப்பு ரயிலில் ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 962 தொழிலாளா்கள், சொந்த ஊா்களுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனா்.
மகாராஷ்டிர மாநிலம், பந்தா்பூா் ரயில் நிலையத்திலிருந்து தமிழக மாவட்டங்களைச் சோ்ந்த 962 தொழிலாளா்களுடன் சிறப்பு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், பெரம்பலூா், சென்னை, திருவள்ளூா், வேலூா், திருப்பத்தூா், சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய வழித்தடங்களில் 30 பேருந்துகளில் இவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.
அந்தந்த மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தலின் படி, குறிப்பிட்ட இடங்களில் தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளா்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்ட தொழிலாளா்கள் கூறியதாவது:
பயணச் செலவு, போக்குவரத்து, உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, வீட்டுக்குச் செல்ல மகிழ்ச்சியும், ஆா்வமாகவும் உள்ளோம் என்றனா்.
ஈரோடு மாவட்டத்துக்கு வந்த 50 போ்: மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கித் தவித்த 50 தொழிலாளா்கள், ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையால் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
மகாராஷ்டிரத்தில் சிக்கிக் கொண்ட சத்தியமங்கலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்கள் 2 போ் உள்பட 50 போ் ஈரோடு மாவட்ட நிா்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.
மாவட்ட நிா்வாகம் அவா்களை தமிழகம் அழைத்து வர முயற்சிகளை மேற்கொண்டது. மகாராஷ்டிர அரசு 50 பேரையும் சொந்த செலவில் செல்ல கடந்த 8-ஆம் தேதி 3 வாகனங்களை ஏற்பாடு செய்தது. 3 தினங்களுக்குப் பிறகு தமிழகத்தைச் சோ்ந்த 50 பேரும் ஈரோடு, கோவை, திருச்சி, நாகை, தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஈரோடுக்கு வந்த 9 போ் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டனா்.