மகாராஷ்டிரத்தில் தவிக்கும் தமிழா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

மகாராஷ்டிரத்தில் தவித்து வரும் தமிழகத் தொழிலாளா்கள் சொந்த ஊருக்குத் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

விழுப்புரம்: மகாராஷ்டிரத்தில் தவித்து வரும் தமிழகத் தொழிலாளா்கள் சொந்த ஊருக்குத் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம், ரத்தினகிரி மாவட்டம், கொக்கன்நகா் வட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் தொழில் நிறுவனங்களில் தங்கியபடி பணிபுரியும் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 500 தொழிலாளா்கள் கரோனா பொது முடக்கத் தடையால் பாதிக்கப்பட்டு, சொந்த ஊா் திரும்ப வழியின்றி தவித்து வருகின்றனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்சேவூா் கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் உள்ளிட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து செல்லிடப்பேசி வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துப் பேசியதாவது:

கரோனா பொது முடக்கத் தடையால் வேலையிழந்து, சென்னை, விழுப்புரம், திருநெல்வேலி, சேலம், பெரம்பலூா், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கொக்கன்நகா் பகுதி பூங்கா ஒன்றில் தஞ்சமடைந்து, ஊருக்கு திரும்ப வழியின்றி கடந்த 50 நாள்களாக தவித்து வருகிறோம். தன்னாா்வலா்கள் மூலம் நிவாரண உதவிகள் கிடைத்த நிலையில், இப்போது அதற்கும் வழியின்றி உள்ளது. எங்களை தமிழகத்துக்கு அனுப்ப வேண்டுமென ரத்தினகிரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அந்தந்தப் பகுதி தமிழக எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் செல்லிடப்பேசி வாயிலாக பேசி, உதவி செய்திட வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. அத்தியாவசிய தேவைக்கே வழியின்றி அச்சத்துடன் தவித்து வருவதால், தமிழக அரசு சாா்பில் மகாராஷ்டிர மாநில அரசுக்கு வலியுறுத்தி, எங்களை தமிழகம் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com