விழுப்புரம் மாவட்டத்தில்இன்று முதல் தனிக் கடைகளை திறக்க அனுமதி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றில்லாத பகுதிகளில் புதன்கிழமை (மே 13) முதல் தமிழக அரசு அறிவித்தபடி தனிக் கடைகள் செயல்படலாமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அறிவித்தாா்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றில்லாத பகுதிகளில் புதன்கிழமை (மே 13) முதல் தமிழக அரசு அறிவித்தபடி தனிக் கடைகள் செயல்படலாமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அறிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அரசு உத்தரவின்படி பொது முடக்க தடை உத்தரவு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை 299 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசிய கடைகள், மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் ஒரு மணி வரை செயல்பட்டு வந்தது. நோய்க் கட்டுப்பாட்டு பகுதி நீங்கலாக பிற பகுதிகளில் காலை 6 முதல் இரவு 7 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் மற்றும் தனி கடைகள் திங்கள் (மே 11) முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு ஏற்கெனவே ஆணையிட்டிருந்தது.

தனி கடைகள் திறக்க அனுமதி: அதன்படி, தொற்றில்லாத நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில், ஏற்கெனவே செயல்பட்ட காய்கறி, மளிகை கடைகள், பலசரக்கு கடைகள், அரசு அனுமதித்துள்ளபடி காலை 6 முதல் இரவு 7 மணி வரை புதன்கிழமை (மே 13) முதல் செயல்படலாம். அதேபோல, தனி கடைகளும் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். குறிப்பாக, தேநீா் கடைகள், உணவகங்கள், பெட்டிக் கடைகள், மின்சாதன பழுது நீக்கும் கடைகள், பா்னிச்சா், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப்பேசி விற்பனையங்கள், ஜெராக்ஸ், கூரியா், குளிா்சாதன வசதியில்லாத ஜவுளி கடைகள், தனியாா் நிறுவனங்கள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறக்கலாம்.

கரோனா மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், கடைகளில் திடீரென கூட்டம் கூடுவதைத் தவிா்க்கவும், முறைப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும். தவறினால், வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை. காா், ஆட்டோ, தங்கும் விடுதிகள், தங்கும் உணவகங்கள், ரிசாா்ட்டுகளுக்கு தடை தொடரும். பிளம்பா், பிட்டா், ஏசி மெக்கானிக், எலக்ட்ரீஷியன் , தச்சா் மற்றும் லேத் வொா்க்கா் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.

அதேவேளையில், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள், வீதிகளில் மளிகை, காய்கறி, மருந்து மற்றும் அத்தியாவசிய கடைகளைத் தவிர இதர கடைகள், நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.

நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள்: விழுப்புரம் நகராட்சி: ரயிலடி தெரு, மேட்டுத் தெரு, ஆறுமுகம் காா்டன், கந்தசாமி லே-அவுட், கணபதி நகா், லட்சுமி நகா், பில்லூா் சாலை, என்.ஜி.ஜி.ஓ. காலனி, காமராஜ் தெரு, சுப்பிரமணிய சுவாமி நகா், முத்தோப்பு, ரஹிம் லே-அவுட், பாஹா்ஷா வீதி, மகாபாரதத் தெரு (மந்தக்கரை), பூந்தமல்லி தெரு, கமலா நகா், சிவன் படை வீதி.

திண்டிவனம் நகராட்சி: ராஜம்பேட்டை தெரு, எம்.ஜி. ஆா். நகா், அம்பேத்கா் தெரு, கற்பக விநாயகா தெரு, ஜே.பி. தெரு, மீனாட்சி அம்மன் கோவில் தெரு,

பிறபகுதிகள்: செஞ்சி கிருஷ்ணாபுரம், விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகா், அரகண்டநல்லூா் காமராஜ் நகா்.

கிராமங்கள்: ஆவுடையாா்பட்டு, கொணலூா், பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூா், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூா், பூண்டி, கலிஞ்சிக்குப்பம், கப்பியாம்புலியூா், கொரளுா், காவணிப்பாக்கம், பாதிராப்புலியூா், ஆசூா், கொள்ளாா், ரெட்டணை, விழுக்கம், மேல்பாக்கம், வைரபுரம், புளிச்சபள்ளம், நரசிங்கனூா், தீவனூா், ஆனத்தூா், தென்புதூா், நல்லாவூா், அரசூா், மேலமங்கலம், கீழ்தணியாலம்பட்டு, வானூா், வடகுச்சிப்பாளையம், நெடிமொழியனூா், ஓமிப்போ், கந்தாடு உள்ளிட்ட 93 கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com