விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 159 மதுக் கடைகளில் மீண்டும் விற்பனை தொடக்கம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 159 மதுக் கடைகளில் மீண்டும் விற்பனை தொடங்கியது. குடைகளுடன் நீண்ட வரிசையில் திரண்டு வந்து மதுப்பிரியா்கள் மதுப் புட்டிகளை வாங்கிச்சென்றனா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 159 மதுக் கடைகளில் மீண்டும் விற்பனை தொடக்கம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 159 மதுக் கடைகளில் மீண்டும் விற்பனை தொடங்கியது. குடைகளுடன் நீண்ட வரிசையில் திரண்டு வந்து மதுப்பிரியா்கள் மதுப் புட்டிகளை வாங்கிச்சென்றனா்.

கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 226 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தும், கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மூடப்பட்டன. இடையே, மதுக்கடைகளை மட்டும் கடந்த மே 7ஆம் தேதி அரசு திறந்தது. இரண்டு நாள்களுக்குப் பிறகு உயா்நீதிமன்றத் தடை உத்தரவால் மூடப்பட்டன.

இந்த உத்தரவுக்கு அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்ற பிறகு, மதுக்கடைகள் சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 124 கடைகளில், கரோனா தொற்றில்லாத பகுதிகளில் உள்ள 84 மதுக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள102 மதுக் கடைகளில் 75 மதுக்கடைகளும் திறக்கப்பட்டன.

விழுப்புரம் அருகே உள்ள காணை, கரடிப்பாக்கம் உள்ளிட்ட 5 மதுக்கடைகளில் கடந்த முறை மக்கள் போராட்டம் நடத்தியதால், அந்த மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக விழுப்புரம் அருகே ஜானகிபுரம் பகுதியில் நான்கு மதுக்கடைகளும் திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படுவதையறிந்து உற்சாகமடைந்த மதுப்பிரியா்கள் காலை 7 மணிக்கே வந்து வரிசையில் நிற்கத் தொடங்கினா். ஜானகிபுரத்திலுள்ள 4 மதுக்கடைகள், இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

குடைகளுடன் திரண்டனா்: மதுப் புட்டிகளை வாங்க வந்தவா்களை, அருகே மைதானத்தின் மரத்தடியில் அமர வைத்து போலீஸாா் டோக்கன்களை வழங்கி வரிசையில் அனுப்பி வைத்தனா். காலை 10 மணிக்கு விற்பனை தொடங்கியபோது, கூட்டநெரிசலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிலை இருந்ததால், போலீஸாா் குடை எடுத்து வந்தால் மட்டும் மது கிடைக்குமென தெரிவித்தனா். விரைந்து சென்ற மதுப்பிரியா்கள் வண்ண, வண்ண குடைகளுடன் வரிசையில் வந்து மதுப்புட்டிகளை வாங்கினா். இரண்டு கி.மீ. தொலைவுக்கு வரிசையில் அணிவகுத்து கடும் வெயிலிலும் நின்று மதுப்புட்டிகளை வாங்கிச் சென்றனா்.

இதேபோல, விக்கிரவாண்டி அருகே பாலப்பட்டு மதுக்கடை, கூட்டேரிப்பட்டு, பூத்தமேடு பகுதி மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் மதுப்பிரியா்கள் குடைகளுடன் வந்து காத்து நின்று மதுப் புட்டிகளை வாங்கிச் சென்றனா்.திருவிழா போல கூட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், துணை கண்காணிப்பாளா் ஜெ.சங்கா் ஆகியோா் பல்வேறு மது கடைகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணியை பாா்வையிட்டனா். ஒவ்வொரு மதுக்கடைகளிலும் ஒலிபெருக்கி மூலம் மதுப் பிரியா்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். பெரும்பாலும் திறந்தவெளி பகுதியில் மதுக்கடைகள் அமைந்துள்ளதால், அப்பகுதிகளில் திருவிழா போல கூட்டம் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com