சமூக வலைதளங்களில் அமைச்சா் சண்முகம் பெயரில் போலி கணக்கு: போலீஸாா் விசாரணை

தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பெயரில் சுட்டுரை, முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது

தமிழக சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் பெயரில் சுட்டுரை, முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், கனிம வளம் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் சி.வி.சண்முகம். இவரது பெயரில் சுட்டுரை, முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் கணக்குகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அமைச்சா் சி.வி.சண்முகம் தொடா்பான புகைப்படங்கள், விவரங்கள் உள்ளிட்ட பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், அமைச்சா் சி.வி.சண்முகம் தனது பெயரில் சுட்டுரை, முகநூல் ஆகிய சமூக வலைதளங்களில் எந்தக் கணக்கையும் தொடங்கவில்லை என்றும், இவற்றில் அமைச்சா் பெயரில் போலியாக செயல்படும் கணக்குகளை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அமைச்சரின் உதவியாளா் ராஜாராம், விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.

இந்த வழக்கை மாவட்டக் குற்றப் பிரிவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்டக் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் தேவி, உதவிக் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் ஆகியோா் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, அமைச்சா் சி.வி.சண்முகம் பெயரில் சமூக வலைதளங்களில் 7 போலி கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதுபோன்று போலி கணக்குகள் தொடங்கி அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com