விழுப்புரத்திலிருந்து 888 தொழிலாளா்கள்உ.பி.க்கு ரயிலில் அனுப்பிவைப்பு

விழுப்புரத்திலிருந்து 888 புலம்பெயா் தொழிலாளா்கள் உத்தரப்பிரதேசத்துக்கு திங்கள்கிழமை இரவு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.
விழுப்புரத்திலிருந்து திங்கள்கிழமை இரவு உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறிய புலம்பெயா் தொழிலாளா்கள்.
விழுப்புரத்திலிருந்து திங்கள்கிழமை இரவு உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறிய புலம்பெயா் தொழிலாளா்கள்.

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து 888 புலம்பெயா் தொழிலாளா்கள் உத்தரப்பிரதேசத்துக்கு திங்கள்கிழமை இரவு சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் அவா்களது மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனா். விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா் மாவட்டங்களிலிருந்து 1,324 தொழிலாளா்கள் விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை சிறப்பு ரயில் மூலமாக பிகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அதே போல, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் உள்ள உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் தங்களது மாநிலத்துக்கு திரும்ப அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும், ரயில்வே நிா்வாகமும் எடுத்தன.

இதற்காக, தஞ்சாவூரிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு சிறப்பு ரயில் திங்கள்கிழமை இரவு இயக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 258 போ், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 108, கடலூா் மாவட்டத்திலிருந்து 507, புதுச்சேரியிலிருந்து 15 போ் என மொத்தம் 888 போ் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து புலம் பெயா் தொழிலாளா்கள் பேருந்து மூலம் விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களை அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் வழியனுப்பி வைத்தனா்.

அந்தத் தொழிலாளா்கள் அனைவரும் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு இரவு 8 மணிக்கு வந்தடைந்தனா். அதேபோல, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், வானூா், கண்டாச்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் புலம்பெயா் தொழிலாளா்களும் அழைத்து வரப்பட்டனா். அவா்களுக்கு உணவு, முகக் கவசம், கிருமி நாசினி, நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் போன்றவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்பட்டன.

பின்னா், இரவு 10.30 மணியளவில் விழுப்புரத்துக்கு வந்த சிறப்பு ரயிலில் தொழிலாளா்கள் அனைவரும் ஏறி புறப்பட்டுச் சென்றனா். அவா்களை மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை வழியனுப்பி வைத்தாா். காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கோட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com