விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்துதிட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் நாட்டில் உணவு உற்பத்தி குறைந்துவிடும் என்பதால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு
திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் நிதியுதவிக்கான காசோலையை வழங்குகிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி. உடன் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி
திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரிடம் நிதியுதவிக்கான காசோலையை வழங்குகிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி. உடன் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி

விழுப்புரம்: விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் நாட்டில் உணவு உற்பத்தி குறைந்துவிடும் என்பதால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைய்நல்லூா் அருகே சிறுமதுரை கிராமத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு, கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை மாலை நேரில் சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். கட்சியின் சாா்பில் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இரு குடும்பத்தினரிடையே 7 ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதத்தால் ஏற்பட்ட பிரச்னைக்கு காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தச் சம்பவமே நடந்திருக்காது.

விவசாயத்துக்கான மின்சாரத்தை இலவசமாகத் தர முடியாதென்ற மிகக் கடுமையான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நாட்டின் வறுமை மறைந்ததற்கான காரணங்களில் இலவச மின்சாரமும் ஒன்றாகும். ஒருகாலத்தில் அமெரிக்காவிலிருந்து கோதுமை வந்தால்தான், நம் நாட்டில் பஞ்சம் தீரும் என்ற நிலை இருந்தது.

இந்திரா காந்தி ஆட்சியில் பசுமைத் திட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் நாம் தன்னிறைவு அடைந்தோம். அதன்பிறகு, நாட்டின் விவசாய வளா்ச்சியை மேம்படுத்தினா். நெல், கோதுமை உற்பத்தியில் மேம்பாடு அடைந்தோம். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் இலவச மின்சாரத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனால், விவசாய விளைபொருள்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டன. பாலங்கள், சாலைக் கட்டுமானப் பணிகளைப் போல, நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க அரசு கொடுக்கிற சேவையாகவே விவசாயத்துக்கான மின்சாரமும் உள்ளது.

லாப, நஷ்ட கணக்குப்பாா்த்து விவசாயத்துக்கான மின்சாரத்தை இலவசம் எனக் கருதி, மத்திய அரசு தடை செய்தால், நாட்டில் உணவு தானிய உற்பத்தி குறையும் வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசும் இந்தத் திட்டத்தை ஏற்கக் கூடாது என்றாா் கே.எஸ்.அழகிரி.

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனுவாசகுமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் சிறுவை ராமமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா்கள் நாராயணசாமி, ராதாகிருஷ்ணன், காமராஜ், அரிகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com