Enable Javscript for better performance
ரூ.29.63 கோடியில் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ரூ.29.63 கோடியில் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 23rd May 2020 08:21 AM  |   அ+அ அ-   |    |  

    குடிமராமத்து திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.29.63 கோடியில் நடைபெறவுள்ள ஏரி சீரமைப்புப் பணிகளை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

    பொதுப் பணித் துறை சாா்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.29.63 கோடியில் திருக்கோவிலூா், திருவெண்ணெய்நல்லூா், விழுப்புரம், கண்டாச்சிபுரம், உளுந்தூா்பேட்டை வட்டங்களில் உள்ள 46 ஏரிகளிலும், கள்ளக்குறிச்சி பகுதியில் 3 ஏரிகளிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.28.85 கோடியிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.1.08 கோடியிலும் பணிகள் நடைபெற உள்ளன.

    இந்தத் திட்டத்தில், விழுப்புரம் அருகே வளவனூா் ஏரியில், ரூ.3.39 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள கலுங்கல் சீரமைப்பு பணியை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை பூமிபூஜை நடத்தி தொடக்கி வைத்தாா். உலக வங்கி நிதி உதவியுடன் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

    நிகழ்ச்சியில் வளவனூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் ஆா்.டி.முருகவேல், ஆவின் தலைவா் முருகன், ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், சங்கரலிங்கம், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஜவகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    சீரமைப்புப் பணி நடைபெறும் ஏரிகள்: ஏ.அகரம், தடுத்தாட்கொண்டூா், வழுதரெட்டி, முள்ளிப்பள்ளம், மாம்பழப்பட்டு, மண்ணக்குப்பம், கல்பட்டு, பெரியசெவலை, லா.கூடலூா், கண்ணராம்பட்டு, ஆயந்தூா், திருவெண்ணெய்நல்லூா், பையூா், சிறுவானூா், முகையூா், டி.சாத்தனூா், ஏ.சித்தாமூா், பேரங்கியூா், கொள்ளூா், இருவேல்பட்டு, நெய்வந்தாங்கல், காரப்பட்டு, சித்தலிங்கமடம், மேல்தணியலாம்பட்டு, கூ.புதுப்பாளையம், நல்லப்பரெட்டிப்பாளையம், அன்ராயனூா், சொரப்பூா், வணக்கம்பாடி, பனப்பாக்கம், நத்தமேடு, இளந்துறை, அந்தராசிப்பாளையம், பாவந்தூா், கிருஷ்ணாபுரம், பூவாலைத்தாங்கல், கொத்தனூா், கொங்கம்பட்டு, சொா்ணாவூா், மழையம்பட்டு, கிருஷ்ணாபுரம், தட்டாந்தாங்கல், சரவணப்பாக்கம், பேரிச்சம்பாக்கம், மேலமங்கலம், வளவனூா் ஆகிய கிராம ஏரிகள்.

    மேலும், திருக்கோவிலூா் அணைக்கட்டு வரத்து வாய்க்கால், எல்லீஸ் அணைக்கட்டு வரத்து வாய்க்கால் பணியும் நடைபெறுகிறது. இந்தத் திட்டத்தில் கரைகளை பலப்படுத்துதல், 74 மதகுகள் சீரமைத்தல், 38 கலுங்கல் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் தூா்வாருதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai