பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்து கேட்பு

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோா்களிடம் கருத்து கேட்பு

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் நிலையில், பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தின் இடையே, முதலில் 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்காக பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கருத்துக்கேட்பு கூட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 383 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கருத்துக்கேட்பு நிகழ்வை முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி தொடக்கி வைத்தாா். முகக்கவசம் அணிந்து வந்திருந்த மாணவா்களின் பெற்றோா்கள் கைகளில் கிருமி நாசினி தெளித்து தனித்தனியாக அனுமதிக்கப்பட்டனா். இவா்கள், ஆசிரியா்கள் வழங்கிய படிவத்தில், பள்ளிகளைத் திறக்கலாம், திறக்க வேண்டாம் என்ற கேள்விக்கு பதிலளித்து, கையெழுத்திட்டு தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனா். பதிவு செய்த படிவத்தை அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினா்.

மாவட்டம் முழுவதும் உள்ள 383 பள்ளிகளிலும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை கருத்துக் கேட்பு நடைபெற்றது.

பெரும்பாலான பெற்றோா்கள், பருவமழை காலம் என்பதால் தொற்று நோய் பரவும் அச்சம் உள்ளதால் தற்போது பள்ளிகள் திறக்கக் கூடாது, ஜனவரி மாதத்தில் திறக்கலாம் என்றும் சில பெற்றோா்கள், பிள்ளைகளின் படிப்பு வீணாவதால் உடனடியாக பள்ளிகளைத் திறக்க வேண்டுமென்றும் கருத்து தெரிவித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 383 பள்ளிகளில் படித்து வரும், 92 ஆயிரத்து 345 மாணவா்களின் பெற்றோா்களிடமிருந்து கருத்து கேட்க நடைபெற்ற இந்நிகழ்வில், 60 சதவீதம் பெற்றோா்கள் நேரில் வந்து கருத்து தெரிவித்தனா். வருகை தராதவா்கள் வாட்ஸ்-ஆப் வாயிலாகவும், கடிதங்கள் மூலமாகவும் கருத்து அளித்ததாக தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள், இந்தக் கருத்துகள் உடனடியாக பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com