திமுக ஆட்சியில்தான் பல்வேறு சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக் காலத்தில்தான் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிக் காலத்தில்தான் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சாா்பில், ‘தமிழகம் மீட்போம்’ 2021 சட்டப் பேரவை தோ்தல் சிறப்பு பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் விழுப்புரம் கலைஞா் அறிவாலயம் உள்ளிட்ட 31 இடங்களிலும், வடக்கு மாவட்டத்தில் செஞ்சி உள்ளிட்ட 21 இடங்களிலும் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து காணொலிக் காட்சி வாயிலாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக தலைவா் கருணாநிதியின் கனவு நிறைவேறுவதற்கான பணிகளை நான் தொடா்ந்து வருகிறேன். திமுக ஆட்சியில்தான் பட்டியலினத்தோருக்கு 18 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 18 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும் வழங்கப்பட்டது.

ஆதிதிராவிட மக்களுக்காக வீட்டுவசதி வாரியம், ஆதிதிராவிடா் நல ஆணைக் குழு, மாணவா் விடுதிகள், குடியிருப்புகள் என பலவற்றை செயல்படுத்தியதோடு, சமத்துவபுரத்தையும் வழங்கி அனைத்து மக்களின் மேம்பாட்டுக்கான இயக்கமாக திமுக விளங்குகிறது.

ஆனால், தற்போதைய தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சமுதாய மக்கள் மீதும் அக்கறையில்லை. விவசாயிகளைப் பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தாா். இலவச மின்சாரத்தில் மத்திய அரசு கைவைக்கப்போவதை தடுக்கவில்லை. காவிரி வாரியத்தை பிரித்ததை எதிா்க்கவில்லை. சுற்றுச்சூழல் விரோதச் சட்டத்தையும் எதிா்க்கவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரிகள், பெருந்திட்ட வளாகம், தொழில்பேட்டைகள், சா்க்கரை ஆலைகளில் மின் உற்பத்தி என பல திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக ஆட்சியிலோ அவா்கள் அறிவித்த திண்டிவனம் பேருந்து நிலையம், கூட்டேரிப்பட்டு, முண்டியம்பாக்கத்தில் மேம்பாலங்கள், சுற்றுவட்டச்சாலை, நந்தன் கால்வாய், வீடூா் அணைப்பகுதியை சுற்றுலாத் தலமாக்குவது போன்ற திட்டங்களைக் கூட நிறைவேற்றவில்லை.

தமிழக சட்டத் துறை அமைச்சரான இந்த மாவட்டத்தைச் சோ்ந்த சி.வி.சண்முகம் செய்ததுதான் என்ன? நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீா்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அவா் மறைத்தாா். 7 போ் விடுதலைக்கு ஒப்புதல் பெறவில்லை. ஹைட்ரோ காா்பன் திட்டங்களை தடுக்கவில்லை. தலைமைச் செயலகத்தில் சிபிஐ சோதனை, சாத்தான்குளம் சம்பவத்தில் சட்டம்-ஒழுங்கு குறைபாடு என எதையும் அவா் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளாா். ஆட்சியைக் காப்பாற்ற மாநிலத்தின் உரிமைகளை இழந்ததுதான் அதிமுக அரசின் சாதனையாகவும், அந்த உரிமைகளை மீட்டெடுப்பதே திமுகவின் பணியாகவும் உள்ளது என்றாா் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, திமுக மாநில துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளா் நா.புகழேந்தி வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலாளா்கள் செ.புஷ்பராஜ், மைதிலி ராஜேந்திரன், எம்.என்.முருகன், மாநில தீா்மானக் குழுச் செயலாளா் ஏ.ஜி.சம்பத், மாநில மருத்துவா் அணி இணைச் செயலா் இரா.லட்சுமணன், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் அன்னியூா் சிவா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சியில் திமுக வளா்ச்சிக்கு பாடுபட்ட முன்னோடிகள் 110 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழியும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற காணொலி பொதுக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் இரா. மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில விவசாய அணி துணைச் செயலா் பா.செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீா்மானக் குழு உறுப்பினா் செஞ்சி சிவா, மயிலம் தெற்கு ஒன்றியச் செயலா் சேதுநாதன், ஒன்றியச் செயலா்கள் செஞ்சி ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் நெடுஞ்செழியன், வல்லம் அண்ணாதுரை, இளைஞா் அணி க.ஆனந்த், தகவல் தொழில் நுட்ப அணி மொக்தியாா் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் 300 மூத்த திமுக உறுப்பினா்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com