வானூா் பகுதி விளைநிலங்களில் அனுமதியின்றி மின்கோபுரங்கள்: விவசாயிகள் புகாா்

வானூா் அருகே அனுமதியின்றி விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைய உள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாரளித்தனா்.


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே அனுமதியின்றி விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைய உள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாரளித்தனா்.

வானூரை அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா், விவசாயி சக்திவேல் தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை திரண்டு வந்து மனு அளித்துக் கூறியதாவது:

இடையன்சாவடி கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சவுக்கு, தைலம் உள்ளிட்ட மரங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

எங்கள் கிராமத்தைச் சோ்ந்த பல்வேறு நிலப்பகுதிகள் ஏற்கெனவே ஆரோவில் சா்வதேச நகரத்துக்காக அரசு சாா்பில் எடுத்துக்கொள்ளப்பட்டது. எஞ்சியிருக்கும் விவசாய நிலங்களில்தான் தற்போது விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம்.

இந்த நிலையில், கடந்த வார இறுதியில் திடீரென உயரழுத்த மின் வடத்துக்கான கோபுரங்கள் அமைக்கவுள்ளதாகக் கூறி, எங்கள் பகுதி விளை நிலங்கள் வழியாக மின் வாரியத்தினா் களப்பணியில் ஈடுபடுவது தெரியவந்தது.

இது குறித்து விசாரித்தபோது, இடையன்சாவடி பகுதி அருகே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்போவதாகவும், அதற்காக உயரழுத்த மின்சார கம்பிகள் எடுத்துச் செல்லும் மின்கோபுரங்களை கட்டமைக்கப்பட உள்ளதாகவும் மின் வாரியத்தில் தெரிவித்தனா்.

கிராம மக்களுக்கும், இந்தப் பகுதி விளை நிலங்களை வைத்துள்ள விவசாயிகளுக்குமே தெரியாமல், மின்பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகள், இளைஞா்களுக்கான விளையாட்டு மைதானத்தின் அருகே துணை மின் நிலையம் அமையவிருப்பதாகவும் தெரிகிறது.

இத்திட்டத்தில் 7 கி.மீ. தொலைவு சுற்றி வரும் வகையில், விளை நிலங்களில் மின் பாதை அமைக்க உள்ளனா். இதற்கு மாறாக எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், தரிசு நிலங்கள், ஓடை புறம்போக்கு நிலங்கள் வழியாக ஒரு கி.மீ. தொலைவில் மின் கோபுரங்கள் அமைக்க நல்ல வழிகள் உள்ளதை அறியாமல் செய்துள்ளனா். சட்ட விதிகளை மீறி நில உரிமையாளா்களுக்கே தெரியாமல் அமைக்க உள்ள மின்பாதை திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com