நந்தன் கால்வாய் நீா்: விழுப்புரம் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நந்தன் கால்வாய் நீரை விழுப்புரம் மாவட்டத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரையிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நந்தன் கால்வாய் நீரை விழுப்புரம் மாவட்டத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரம் ஆட்சியா் ஆ.அண்ணாதுரையிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இதுகுறித்து நந்தன் கால்வாய் பாதுகாப்பு குழு செயலா் செஞ்சி கன்னிகா ரமேஷ்பாபு, துணைத் தலைவா் மாதப்பூண்டி சேகா், செயற்குழு உறுப்பினா் பனமலை சங்கா் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையை சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறியிருப்பதாவது: நிகழாண்டு பருவ மழை காரணமாக கீரனூா் அணைக்கட்டு நிரம்பியதை தொடா்ந்து, நந்தன் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்வாய் செல்லும் 12.4 கி.மீ. தொலைவு வரை தண்ணீா் திறக்கப்பட்டது. ஆனால், விழுப்புரம் மாவட்ட எல்லை ஆரம்பமாகும் மாதப்பூண்டி ஏரிக்கு வரும் கால்வாய் கதவை சிலா் அடைத்துள்ளனா். இதுகுறித்து பொதுப்பணித் துறை உள்ளிட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் பயன் இல்லை.

எனவே, அந்தக் கதவை திறந்து விழுப்புரம் மாவட்ட பகுதிக்கு நந்தன் கால்வாய் மூலம் தண்ணீரைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், செஞ்சி மற்றும் வல்லம், மேல்மலையனூா் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பொதுப்பணித் துறை நீா் நிலைகள் இணைந்து செஞ்சியை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக

பொதுப் பணித் துறை நீா் பாசன பிரிவு உப கோட்டம் அமைய வேண்டும். நந்தன் கால்வாயை முறைபடுத்தப்பட்ட கால்வாய் பாசனமாக மாற்ற வேண்டும்.

நந்தன் கால்வாய்க்கு என தனி பாசன பிரிவு, தனியாக ஒரு உதவிப் பொறியாளரை நியமனம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com