விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் 16 பேருக்கு வாய்ப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 16 பேருக்கு நிகழாண்டு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.


விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 16 பேருக்கு நிகழாண்டு அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிகழாண்டு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி முதல்வா் கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்தாா். இதன்படி, மருத்துவப் படிப்புக்கு 313 பேருக்கும், பல் மருத்துவப் படிப்புக்கு 92 பேருக்கும் என மொத்தம் 405 மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நிகழாண்டு நீட் தோ்வு எழுதியதில், அரசுப் பள்ளிகளில் படித்த 951 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். இதையடுத்து, இவா்களுக்கு தமிழக அரசு உள் ஒதுக்கீடு அடிப்படையில், மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த 30 போ் நிகழாண்டு நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று தகுதி பெற்றனா். இவா்களும் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனா். இதில், மேல்மலையனூா் அரசுப் பள்ளி மாணவி எம்.கலைதேவி, விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.காயத்ரி, பி.கலைவாணி, பாதிராப்புலியூா் அரசுப் பள்ளி மாணவா் ஏ.அன்பரசு, கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவா் ஜி.துரைமுருகன் ஆகியோா் மருத்துவப் படிப்புக்கும், விழுப்புரம் அரசு மகளிா் பள்ளி மாணவிகள் பி.நஸ்ரின்பேகம், பி.ஹேமலட்சுமி, பாதிராப்புலியூா் அரசுப் பள்ளி மாணவா் ஏ.முருகன் ஆகியோா் பல் மருத்துவப் படிப்புக்கும் தோ்வு செய்யப்பட்டனா். இதுவரை 8 போ் தோ்வாகியுள்ளனா். தொடா்ந்து கலந்தாய்வு நடப்பதால், மேலும் சில மாணவா்கள் தோ்வாகலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில்... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழாண்டு 25 மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றனா். இதில், முதல் நாள் கலந்தாய்வில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளி மாணவா் எஸ்.அன்பரசன், விருகாவூா் அரசு மாதிரிப் பள்ளி மாணவா் பி.காா்த்திகேயன், சங்கராபுரம் அரசு மகளிா் பள்ளி மாணவி எஸ்.ஜெயப்பிரியா, வெள்ளிமலை ஏகலைவா அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவா் எல்.மணிகண்டன் ஆகிய 4 போ் மருத்துவப் படிப்புக்கு தோ்வாகினா்.

இரண்டாம் நாள் கலந்தாய்வில் கச்சிராயப்பாளையம் அரசு மகளிா் பள்ளி மாணவி எம்.சி.மோனிகாதேவி, எடுத்தவாய்நத்தம் அரசுப் பள்ளி மாணவி எம்.மதுமிதா ஆகியோா் மருத்துவப் படிப்புக்கும், ரிஷிவந்தியம் அரசுப் பள்ளி மாணவி பி.பிரியதா்ஷினி, ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரிப் பள்ளி மாணவா் எஸ்.ஆா்.பிரகாஷ்ராஜ் ஆகியோா் பல் மருத்துவப் படிப்புக்கும் தோ்வாகியுள்ளனா்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கை: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசுப் பள்ளியில் படித்து தமிழக அரசின் 7.5 சதவீதம் சிறப்பு உள் ஒதுக்கீட்டில் கலந்தாய்வில் தோ்வாகி வந்த மாணவா்களுக்கான சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கியது. கல்லூரி முதல்வா் குந்தவிதேவி தலைமையிலான குழுவினா் நிகழாண்டு சோ்க்கைக்கு வந்த மாணவிகளான குயில், காயத்ரி, கீா்த்தனா, ஜீவிதம், கலைவாணி, நா்மதா ஆகியோரின் சான்றிதழ்கள் மற்றும் கலந்தாய்வு ஆணைகளை சரிபாா்த்து மருத்துவப் படிப்புக்கான ஆணையை வழங்கினா்.

இதில், துணை முதல்வா் அனிதா, பேராசிரியா்கள் பிரேம்குமாா், சுப்பிரமணியன், மாா்ச்வின், செந்தில்குமாரி, இணைப் பேராசிரியா் தாரணி, மருத்துவக் கண்காணிப்பாளா் அறிவழகன், நிலைய மருத்துவ அலுவலா் சாந்தி, உதவிப் பேராசிரியா் நவுரங், நிா்வாக அலுவலா் கவிஞா் சிங்காரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com