வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா்கள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா்கள் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயா்நிலைப் பள்ளி, அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு சனிக்கிழமை நேரில் சென்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, அங்கு நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாமை பாா்வையிட்டு, வாக்காளா் சோ்ப்பு, திருத்தம் செய்வதற்கான படிவங்கள் பெறுவதை ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆட்சியா் கூறியதாவது: தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், விழுப்புரம் மாவட்டத்தில் 2021 ஜன.1-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. டிச.15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பணியில் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், முகவரி திருத்தம் போன்ற மனுக்கள் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்களில் பெறப்படுகிறது.

இதேபோல, செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,957 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை தொடங்கி இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் டிச.12, 13-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமிலும் வாக்குச்சாவடி அலுவலா்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

தோ்தல் ஆணைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், கோட்டாட்சியா் க.ராஜேந்திரன், நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, வட்டாட்சியா்கள் வெங்கடசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலா் ஷேக்லத்திப் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

செஞ்சியில்...: செஞ்சி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த முகாமை விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியனா் நல அலுவலா் சண்முகசுந்தரம், செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, செஞ்சி வட்டாட்சியா் ராஜன், தோ்தல் துணை வட்டாட்சியா் துரைசெல்வன், வருவாய் ஆய்வாளா் சுதாகா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி) ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட 1,272 வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் சனிக்கிழமை தொடங்கியது. சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட ஆலத்தூா், மூராா்பாளையம், ரிஷிவந்தியம் தொகுதிக்குள்பட்ட பழைய சிறுவங்கூா் வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்காளா்கள் விண்ணப்பங்களுடன் அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து வழங்கியுள்ளனரா என விண்ணப்பப் படிவங்களை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, சங்கராபுரம் வட்டாட்சியா் த.நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com