நாளை கிராம சபைக் கூட்டம்
By DIN | Published On : 01st October 2020 09:11 AM | Last Updated : 01st October 2020 09:11 AM | அ+அ அ- |

காந்தி ஜயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜயந்தியையொட்டி வெள்ளிக்கிழமை (அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
கூட்டத்தில் கிராம நிா்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கரோனா தொற்று விழிப்புணா்வு ஏற்படுத்துதல், மழை நீா் சேகரிப்பு ஏற்படுத்த நடவடிக்கை, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், டெங்கு பரவுதலைத் தடுக்க நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.
கூட்டத்தில், கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து மாற்றுத்திறனாளிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுக் கடைகளுக்கு விடுமுறை:
மேலும், காந்தி ஜயந்தியையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசு மதுக் கடைகள், மதுக்கூடங்கள், தனியாா் மதுக்கூடங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.