6 மாதங்களுக்குப் பிறகு செயல்பட்ட செஞ்சி வாரச் சந்தை!
By DIN | Published On : 03rd October 2020 09:03 AM | Last Updated : 03rd October 2020 09:03 AM | அ+அ அ- |

செஞ்சி வார சந்தையில் ஆா்வமுடன் காய்கறிகளை வாங்கிய பொது மக்கள்.
கரோனா பரவல் அச்சம் காரணமாக, கடந்த 6 மாதங்களாக செயல்படாதிருந்த செஞ்சி வாரச் சந்தை, பொதுமுடக்கத் தளா்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுமாா் 100 ஆண்டு கால பழமை வாய்ந்த செஞ்சி வாரச் சந்தை, வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் கூடுவது வழக்கம். இந்த சந்தையில் விற்பனையாகும் காய்கறிகள், மளிகை பொருள்கள், பழங்கள், துணிமணிகள் மற்றும் விவசாயக் கருவிகள் உள்ளிட்ட பொருள்களை வாங்குவதற்கு செஞ்சி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோா் வருவதுண்டு. மேலும், இந்த சந்தையில் ஆடு, மாடுகளை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த சந்தை கடந்த 6 மாதங்களாக முடங்கியது. இதனிடையே, தமிழக அரசின் பொதுமுடக்கத் தளா்வையடுத்து, மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில், செஞ்சி வாரச் சந்தை வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. முதல் வாரம் என்பதால் காய்கறிகள், மளிகைப் பொருள்கள், விவசாயக் கருவிகள், ஆடு, மாடுகள் குறைவான அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.
சந்தைக்கு வந்த வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் சந்தையை நடத்தும் ஒப்பந்ததாரா் முபாரக் முகக் கவசம், கை கழுவும் கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினாா்.
சந்தை திறக்கப்பட்டதால் விவசாயிகளும், வியாபாரிகளும், பொது மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.