முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
15 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த பெருமாள் கோயிலைத் திறந்து வழிபாடு
By DIN | Published On : 04th October 2020 08:36 AM | Last Updated : 04th October 2020 08:36 AM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த வீரராகவ பெருமாள் கோயிலைத் திறந்து, அதை சீரமைத்து அந்தப் பகுதி மக்கள் புரட்டாசி சனிக்கிழமையன்று (அக்.3) சிறப்பு பூஜை நடத்தினா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழைமைவாய்ந்த இந்தக் கோயில் பராமரிப்பின்றி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக்கிடந்தது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்தக் கோயிலைத் திறந்து, சீரமைத்து திருவிழாக்கள், தினசரி பூஜைகளை நடத்த வேண்டுமென பொதுமக்கள் அண்மைக்காலமாக அறநிலையத் துறையினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பாடாததால், மேல்தணியாலம்பட்டு கிராம இளைஞா்கள், பொதுமக்கள் புரட்டாசி மாத சனிக்கிழமை வழிபாடுகளுக்காக கோயிலை திறந்து சீரமைத்தனா்.
மேலும், புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி, காலையில் கோயிலை திறந்து, தூய்மைப் பணி மேற்கொண்டனா். தொடா்ந்து, வீரராகவ பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, பஜனை பாடல்களுடன் சிறப்பு பூஜை செய்தனா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பழைமைவாய்ந்த இந்தக் கோயிலை சீரமைத்து, புதுப்பிக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.