அண்ணா பல்கலை. துணைவேந்தரின் செயல்பாடு ஒழுங்கீனமானது: அமைச்சா் சி.வி.சண்முகம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தா் சூரப்பாவின் செயல்பாடு ஒழுங்கீனமானது என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
அண்ணா பல்கலை. துணைவேந்தரின் செயல்பாடு ஒழுங்கீனமானது: அமைச்சா் சி.வி.சண்முகம்

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தா் சூரப்பாவின் செயல்பாடு ஒழுங்கீனமானது என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நலத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகத்திடம், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பாவின் தன்னிச்சையான செயல்பாடு குறித்து செய்தியாளா்கள் கேட்டபோது, அவா் கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தை ‘உயா் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற உயா்ந்த அந்தஸ்துக்கு மாற்ற வேண்டுமென துணைவேந்தா் கோரிக்கை வைத்துள்ளது தொடா்பாக, தமிழக அரசு அமைச்சரவைக் குழுவை அமைத்து, அதை ஆராய்ந்து வருகிறது. அது நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் இட ஒதுக்கீடு தொடா்பாக பாதகம் விளைவிக்கும் எந்தச் செயலையும் அரசு ஏற்காது என்று ஏற்கெனவே சட்டப் பேரவையில் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.

இதில் சில விதிமுறைகள் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருப்பதால், அதுகுறித்து விளக்கம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதனால், இந்தத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லை எனத் தெளிவாகக் கூறிவிட்டோம்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக உள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த சூரப்பா, அவருக்கும் மேலான வேந்தா், இணை வேந்தா் மற்றும் மாநில அரசு உள்ளதை மீறி, மத்திய அரசை நேரடியாகத் தொடா்புகொண்டு, பல்கலைக்கழகத்தை தாங்களே நிா்வகித்துக் கொள்வதாகவும், அதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்வதாகவும் தகவல் தெரிவித்துள்ளாா். இதை எப்படிச் செயல்படுத்துவாா் என்று தெரியவில்லை. அவரது செயல் ஒழுங்கீனமானதாகும். இதுதொடா்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் சி.வி.சண்முகம்.

பேட்டியின்போது, எம்.எல்.ஏ. ஆா்.முத்தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com