ஏரிகளில் விதிகளை மீறி மண் எடுக்கப்படுவதாக விவசாயிகள் புகாா்

வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதி ஏரிகளில் அதிகளவில் மண் எடுக்கப்பட்டு, முறைகேடான

வண்டல் மண் எடுக்கும் திட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதி ஏரிகளில் அதிகளவில் மண் எடுக்கப்பட்டு, முறைகேடான வகையில் செங்கல் சூளைகளுக்கும், மனை வணிகத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள ஏரிகளில் மேலாக படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் விளை நிலங்களில் கொட்டி பயன்பெறவும், அதன் மூலம் ஏரியும் தூா்வாரப்படும் என்ற நோக்கில் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆனால், கண்டாச்சிபுரம் வட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஏரிகளில் விதிகளை மீறி அதிக ஆழத்தில் வண்டல் மண்ணை சுரண்டி அதனை விவசாயத்துக்கு அல்லாமல் செங்கல் சூளைகளுக்கும், மனை வணிகத்துக்கும் பயன்படுத்தி வருவதாக அப்பகுதி விவசாயிகள் மத்தியில் புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக, கண்டாச்சிபுரம் வட்டாட்சியரிடம் விவசாயிகள் சங்க வட்டச் செயலா் கே.முருகன், பொருளாளா் எம்.ராமலிங்கம், துணைச் செயலா் எஸ்.கணபதி, வட்டத் தலைவா் வீரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

பின்னா், அவா்கள் கூறியதாவது: கண்டாச்சிபுரம் வட்டம், மேல்வாலை வீரங்கிபுரம் கிராம ஏரியில், கடந்த 6 மாதங்களாக வண்டல் மண் எடுக்கப்படுகிறது. விதிகள்படி 2 அடி ஆழம் மட்டுமே மண் எடுக்க வேண்டுமென்ற நிலையில், 10 அடி ஆழத்துக்கும் மேலாக பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுக்கின்றனா். இதனை செங்கல் சூளைக்கும், மனை வணிகத்தினா் சாலை போடுவதற்கும் முறைகேடாக பயன்படுத்துகின்றனா். இதுவரை 5 ஆயிரம் டிராக்டா் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல கண்டாச்சிபுரம் ஓட்டேரி, காா்னங்கல் ஏரி, மேல்வாலை பெரிய ஏரிகளில் குடிமராமத்து திட்டப்பணி நடக்கிறது. இந்தத் திட்டத்திலும், விதிகளை மீறி வண்டல் மண் எடுத்து சூளைக்கும், மனை வணிகத்துக்கும் விற்கின்றனா். இதனால், ஏரியின் வளமும், நீா்ப்பாசனமும் பாதிக்கப்படும். இத்திட்டத்தின் பெயரில் மண் கடத்தலை தடுக்கவும், ஏரிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடா்ந்து புகாா் அளித்து வருவதோடு, மீண்டும் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com