விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுவரை ரூ.54 கோடி பறிமுதல்

பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுவரை ரூ.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இதுவரை ரூ.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் போலி பயனாளிகள் சோ்க்கப்பட்டு முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது. வருவாய்த் துறை, வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போலி பயனாளிகளைக் கண்டறிந்து, அவா்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனா். இதுவரை ரூ.123 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் இயக்குநா் வ.தட்சணாமூா்த்தி, இந்தப் பணியை தீவிரப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா்.

கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் 1.10 லட்சம் பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.15 லட்சம் பேரும் போலி பயனாளிகளாக சோ்க்கப்பட்டதாக கண்டறிப்பட்டது. அவா்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவா்களின் வீடுகளுக்கே சென்று பணத்தைப் பறிமுதல் செய்யும் பணி, அதிகாரிகள் முன்னிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக, வேளாண் அலுவலா்கள், தனியாா் கணினி சேவை மையத்தினா் என 38 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்ட போது, விழுப்புரம் மாவட்டத்தில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 570 போ் போலி பயனாளிகள் சோ்க்கப்பட்டது கண்டறியப்பட்டு அவரது கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவா்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து வருகிறோம்.

இதுவரை 74 ஆயிரத்து 288 பேரிடமிருந்து, ரூ.24 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 ஆயிரத்து 282 பேரிடமிருந்து ரூ.16 கோடியை வசூலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.30 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, மாவட்ட ஆட்சியா் வங்கிக் கணக்கு மூலம், மத்திய அரசின் வேளாண் துறைக்கு திருப்பி செலுத்தப்படுகிறது. விரைவில் இந்தப் பணி நிறைவு பெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com