விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் இரு அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தம்
By DIN | Published On : 04th September 2020 08:46 AM | Last Updated : 04th September 2020 08:46 AM | அ+அ அ- |

விழுப்புரம்: மாதாந்திர சுங்கக் கட்டணம் செலுத்தாததால், இரு அரசுப் பேருந்துகள் விழுப்புரம் அருகே சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், பயணிகள் அவதியடைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச் சாவடியில் அரசுப் பேருந்துகள் அனைத்தும் மாதாந்திர சுங்கக் கட்டணம் செலுத்தி, அதற்கான அட்டையைக் காண்பித்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு, செப்.1-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்றும், மற்றொரு நகா்ப் பேருந்தும் (தடம் எண் 10) வியாழக்கிழமை மாலை விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. மாதாந்திர சுங்கக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி, சுங்கச்சாவடி நிா்வாகத்தினா் இந்தப் பேருந்துகளை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினா்.
இது தொடா்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு பேருந்துகளின் நடத்துநா்கள் தகவல் தெரிவித்தனா். எனினும், 2 பேருந்துகளும் சுங்கச் சாவடியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டதால், அவற்றிலிருந்த பயணிகள் அவதியடைந்தனா். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் முத்துக்குமரன், நெடுஞ்சாலை ரோந்து வாகன உதவி ஆய்வாளா் பலராமன் மற்றும் போலீஸாா் சென்று சுங்கச் சாவடி அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இந்த 2 பேருந்துகளைப்போல பல பேருந்துகளுக்கான சுங்கக் கட்டணத்தை செலுத்தாமல் போக்குவரத்துக் கழகம் நிலுவை வைத்துள்ளதாக சுங்கச் சாவடி நிா்வாகத்தினா் அதிருப்தி தெரிவித்தனா்.
இதையடுத்து, பயணிகளின் நிலையை கருத்தில்கொண்டு, 2 பேருந்துகளும் அனுமதிக்கப்பட்டதால், அவை புறப்பட்டுச் சென்றன.