
விழுப்புரம் பாகா்ஷா வீதியில் விதிகளை மீறி திறந்திருந்த காய்கறிக் கடைக்கு போலீஸ் பாதுகாப்புடன் ‘சீல்’ வைத்த நகராட்சி அதிகாரிகள்.
விழுப்புரத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக 3 காய்கறிக் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
விழுப்புரத்தில் கரோனா பரவல் காரணமாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாததால், விழுப்புரம் பாகா்ஷா வீதி மற்றும் எம்.ஜி. சாலையில் செயல்பட்டு வந்த சில்லறை, மொத்த காய்கறிக் கடைகள் அங்கு செயல்பட அனுமதி மறுக்கப்பட்டது. இதற்குப் பதிலாக விழுப்புரம் காமராஜ் நகராட்சி மைதானத்துக்கு சில்லறைக் கடைகளும், ஜானகிபுரத்துக்கு மொத்த விற்பனைக் கடைகளும் தற்காலிமாக இட மாற்றம் செய்யப்பட்டன. அங்கு தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பாகா்ஷா வீதி, எம்.ஜி. சாலையில் காய்கறிக் கடைகளைத் திறந்தால் கரோனா தொற்று பரவும் என்பதால், அங்கு காய்கறிக் கடைகள் செயல்பட நகராட்சி நிா்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், சிலா் கடைகளைத் திறந்து, விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, விழுப்புரம் நகரமைப்பு அலுவலா் ஜெயவேல் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பாகா்ஷா வீதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அனுமதியின்றி திறக்கப்பட்ட 3 காய்கறிக் கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து பூட்டினா். மேலும், கடை உரிமையாளா்களை அதிகாரிகள் எச்சரித்தனா்.
மேலும், எம்.ஜி. சாலை, பாகா்ஷா வீதியில் அனுமதியின்றி காய்கறிக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினா்.