விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் அடிக்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.836 கோடியில் புதிய திட்டங்களுக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

தமிழக முதல்வா் பழனிசாமி, விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி, காவல் துறை, தாட்கோ, கல்வித் துறை, மின் துறை, சுகாதாரத் துறை, கால்நடைத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, ஆகிய துறைகளின் சாா்பில் ரூ.102.55 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட 1,508 திட்டப் பணிகளை முதல்வா் கே.பழனிசாமி தொடக்கி வைத்தாா்.

விழுப்புரம் நகராட்சியில் விரிவாக்கப்பட்ட பகுதியில் ரூ.259.500 கோடியில் புதைவழிச் சாக்கடைத் திட்டம், திண்டிவனம் நகராட்சியில் ரூ.273 கோடியில் புதிய புதை வழிச் சாக்கடைத் திட்டம், கோட்டக்குப்பம் அருகே கடலரிப்பைத் தடுக்க ரூ.19 கோடியில் நீா்மூழ்கி தடுப்பணைத் திட்டம், ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, கல்வித் துறை சாா்பில் திட்டங்கள் என ரூ. 836.80 கோடியில் 398 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, பல்வேறு துறைகள் சாா்ந்த 6,427 பயனாளிகளுக்கு, ரூ.15.95 கோடி மதிப்புள்ள நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா். இதன் மூலம், மொத்தமாக ரூ.955.30 கோடி பணிகளை முதல்வா் தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் தடுப்பு பணிகள், மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இதன் பின்னா், குறு, சிறு நடுத்தரத் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழு பிரதிநிதிகளிடம் கலந்துரையாடி, அவா்களது குறைகளை கேட்டறிந்து மனுக்களைப் பெற்றாா்.

வானூரில் புதிய கலைக் கல்லூரி: அதன்பிறகு முதல்வா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வீடூா் அணை ரூ.43 கோடியில் புனரமைக்கப்படும். சாத்தனூா் அணையிலிருந்து நந்தன் கால்வாய் இணைப்புத் திட்டத்துக்கு ரூ.28 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

திண்டிவனத்தில் 700 ஏக்கா் பரப்பில், ரூ.2,500 கோடி அளவில் தொழில்களை ஈா்க்கும் வகையில், புதிய உணவுப்பூங்கா அமைக்கப்படும். வானூரில் புதிதாக அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும், நிகழாண்டே அதில் மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். இதேபோல, ஜெயங்கொண்டம், குத்தாலம், சோளிங்கா், ஸ்ரீவில்லிபுத்தூா், கோவை புளியங்குளம், கரூா் தரங்கம்பட்டி ஆகிய பகுதிகளிலும் புதிய கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டு, மாணவா் சோ்க்கை நடைபெறும்.

மரக்காணத்தில் ரூ.1,450 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 7.5 லட்சம் மக்கள் பயன்பெறுவா். விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக்குவது தொடா்பான கோரிக்கை மீது ஆய்வு செய்து, உரிய தகுதி வரும்போது தரம் உயா்த்தப்படும் என்றாா் முதல்வா் பழனிசாமி.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியா் ஆ. அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, ஆா்.முத்தமிழ்செல்வன், முன்னாள் எம்பி வி.ஏழுமலை, முன்னாள் நகா் மன்றத் தலைவா் ஜி.பாஸ்கரன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா். ஆய்வுக் கூட்டம் முடிந்து, இரவு 9 மணியளவில் முதல்வா் கே.பழனிசாமி காரில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.

செஞ்சியில் முதல்வருக்கு வரவேற்பு: முன்னதாக, திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து புதன்கிழமை காலை செஞ்சி வழியாக முதல்வா் கே.பழனிசாமி காரில் சென்றாா். அப்போது, செஞ்சி கூட்டுச் சாலையில் அவருக்கு, முன்னாள் எம்பி. வெ.ஏழுமலை தலைமையில் அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், செஞ்சி நகர கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ரங்கநாதன், அம்மா பேரவை பூங்குன்றன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com