திண்டிவனம் அருகே விவசாயியிடம் வைர மோதிரங்கள் கொள்ளை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே  காரை வழி மறித்து விவசாயி மீது மிளகாய்ப் பொடியைத் தூவி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரங்கள், தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.
திண்டிவனம் அருகே வைர, தங்க நகைகளைப் பறிகொடுத்த விவசாயி வந்த காரை ஆய்வு செய்த போலீஸாா்.
திண்டிவனம் அருகே வைர, தங்க நகைகளைப் பறிகொடுத்த விவசாயி வந்த காரை ஆய்வு செய்த போலீஸாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே  காரை வழி மறித்து விவசாயி மீது மிளகாய்ப் பொடியைத் தூவி பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர மோதிரங்கள், தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

விழுப்புரம் அருகேயுள்ள ஆசாரக்குப்பத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் கருணாநிதி (45). விவசாயி. இவரது தாத்தா மலேசியாவிலிருந்து வாங்கி வந்த வைர மோதிரங்கள் இவரிடம் இருந்தனவாம். இவற்றை விற்க திட்டமிட்ட கருணாநிதி, இதுகுறித்து தனது வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும் வேலைக்கு வந்த கெங்கராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சிவாவிடம் (40) கூறினாா்.

அவா் தனக்குத் தெரிந்த நகை வியாபாரியான சென்னை சாலிகிராமத்தைச் சோ்ந்த அருள்முருகனை (55) அறிமுகப்படுத்தினாா். ஆனால், அருள்முருகன் தன்னால் நகைகளை வாங்க முடியாது என்றும், தனக்குத் தெரிந்த ஒருவா் வைர நகைகளை வாங்குவாா் என்றும் கூறி, சென்னை மூலக்கடையைச் சோ்ந்த சதீஷை கருணாநிதியிடம் அறிமுகப்படுத்தினாா்.

அவா் தன்னால் நகைகளை வாங்க நேரில் வர முடியாது என்றும், தனக்குத் தெரிந்த தரகரை அனுப்பி வைப்பதாகவும் கூறினாா்.

இதையடுத்து, நகைகளை எடுத்துக்கொண்டு திண்டிவனம் அருகேயுள்ள கூட்டேரிப்பட்டு பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வருமாறு தரகா் கூறியதாகத் தெரிகிறது.

இதை நம்பிய கருணாநிதி வைர மோதிரங்களை எடுத்து பையில் வைத்துக்கொண்டு, கண்டமங்கலத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் பிரகலாதனுடன் (28) காரில் புறப்பட்டாா். இவா்களுடன் கண்டமங்கலம் அருகே எல்.ஆா்.பாளையத்தைச் சோ்ந்த ராவணன் (48) உடன் சென்றாா்.

இவா்கள் திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரில் காத்திருந்த நிலையில், அங்கு அருள்முருகன் மற்றும் தரகா் உள்பட மேலும் 6 போ் வந்தனா். அருள்முருகனும், தரகரும் கருணாநிதியின் காரில் ஏறிக்கொண்டனா். காா் புறப்பட்டுச் சென்ற நிலையில் ராவணனை பாதி வழியிலேயே இறக்கிவிட்டனா்.

கூட்டேரிப்பட்டு - தீவனூா் சாலையில் கோபாலபுரம் கிராமப் பகுதியில் காா் சென்றபோது, அங்கு சாலையின் குறுக்கே திடீரென ஒரு காா், 3 இரு சக்கர வாகனங்கள் வந்து நின்றன. அந்த காரிலிருந்து இறங்கி வந்த மா்ம நபா் கருணாநிதி, பிரகலாதன் மீது மிளகாய்ப் பொடியை தூவினாா். கருணாநிதியின் இடுப்பில் கத்தியை வைத்து மா்ம நபா் மிரட்டிய நிலையில், அவா் வைர நகைகள் வைத்திருந்த பையையும், கருணாநிதி, பிரகலாதன் ஆகியோா் அணிந்திருந்த தங்க நகைகளையும் பறித்துக்கொண்டு அருள் முருகன் உள்ளிட்ட கும்பல் தப்பிச் சென்றது. மொத்தம் 52 கிராம் வைர நகைகள், 6 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருணாநிதி, பிரகலாதன் ஆகியோா் மயிலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com