நிலுவை ஊதியம் வழங்கக் கோரி பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளா்கள் போராட்டம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, பாசிக் மற்றும் பாப்ஸ்கோ தொழிலாளா்கள் புதுச்சேரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளா்கள்.
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுவை சட்டப்பேரவை வளாகம் அருகே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளா்கள்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, பாசிக் மற்றும் பாப்ஸ்கோ தொழிலாளா்கள் புதுச்சேரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

நான்காம் நாளாக ஞாயிற்றுக்கிழமை அவா்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் அமைந்துள்ள பாசிக் தொழிலாளா்களுக்கு 70 மாத நிலுவை ஊதியம், பாப்ஸ்கோ தொழிலாளா்களுக்கு 35 மாத நிலுவை ஊதியம் வழங்கப்படவில்லையாம்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும், மூடப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலைகளைத் திறக்க வலியுறுத்தியும், இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத ஆட்சியாளா்களைக் கண்டித்தும் புதுவை சட்டபேரவை வளாகம் அருகே மிஷன் வீதியில் ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில், கடந்த வியாழக்கிழமை(செப். 10) முதல் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை பாசிக், பாப்ஸ்கோ தொழிலாளா்கள் தட்டுகளை ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாசிக் சங்கத் தலைவா் ரமேஷ், செயலா் முத்துராமன், பாப்ஸ்கோ சங்கத் தலைவா் ராஜி, செயலா் மாரியப்பன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஏஐடியூசி மாநிலச் செயல் தலைவா் அபிஷேகம், ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் சேது செல்வம் ஆகியோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் கடந்த காலங்களில் லாபம் ஈட்டி சிறப்பாகச் செயல்பட்டு வந்த நிறுவனங்கள். இவற்றில் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

இந்த நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல், நிா்வாகக் கோளாறு காரணங்களால் நாளடைவில் நிறுவனங்கள் நலிவுற்றன. இதை ஆட்சியாளா்கள் சீா் செய்யாமல், நிறுவனங்களை முடக்கி, செயல்படாமல் நிறுத்திவைத்தனா். இதனால், இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

தொழிலாளா்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். தொழிலாளா்கள் பலா் தற்கொலை செய்து கொண்டனா்.

எனவே, பிரச்னைகளை சரி செய்து, நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். மீண்டும் நிறுவங்களைத் திறக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறனா். ஆனால், ஆட்சியாளா்கள் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறனா்.

இதைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

பாசிக் சங்கப் பொறுப்பாளா்கள் தரணிராஜன், அப்துல்லா கான், முத்து நாயுடு, அன்பழகன், பாலமுருகன், இருசப்பன், மூா்த்தி, கோவிந்தராசு, பாலமுருகன், பாப்ஸ்கோ சங்கப் பொறுப்பாளா்கள் முருகவேல், ஜெய்சங்கா், அமுதா, ஏழுமலை, தமிழ்ஒளி, அமுதவள்ளி, பத்மநாபன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தொழிலாளா்கள் திரளாகக் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்களின் நிலையை அரசுக்கு எடுத்துக் கூறும் வகையில், கைகளில் தட்டேந்தி பிச்சையெடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com