விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 8 போ் கைது

கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக 8 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பிறகு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட இடைத்தரகா்கள் சண்முகம், தமிழரசன்.
விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்ட பிறகு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட இடைத்தரகா்கள் சண்முகம், தமிழரசன்.

கடலூா்/விழுப்புரம்: கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக 8 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விவசாயிகளுக்கான பிரதமரின் ஊக்க நிதியுதவி (பி.எம்.கிசான்) திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமாா் ரூ.110 கோடி வரை முறைகேடு நடைபெற்றது கண்டறியப்பட்டது. இதில், கடலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தத் திட்டத்தில் புதிதாகச் சோ்ந்த 80 ஆயிரம் பேரில் 3,500 போ் மட்டுமே உண்மையான விவசாயிகள் எனத் தெரியவந்தது. இவா்களில், 40 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என்பதும், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 28 ஆயிரம் போ் வெளி மாவட்டங்களில் பயனாளிகள் பட்டியலில் இணைந்திருப்பதும் தெரியவந்தது.

இதனால், கடலூா் மாவட்டத்தில் சுமாா் 64 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.13 கோடி வரை திரும்பப் பெற வேண்டியுள்ளது. இந்த முறைகேடு குறித்து கடலூா் சிபிசிஐடி ஆய்வாளா் தீபா தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து பண்ருட்டி, விருத்தாசலம், விஜயமாநகரம் பகுதிகளில் கணினி மையம் நடத்தி வரும் சுமாா் 150 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டம், திருத்துறையூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தனுஷ் (33), அக்கடவல்லியைச் சோ்ந்த ப.அழகேசன் (53), கண்டரக்கோட்டையைச் சோ்ந்த வே.குமரகுரு (48) மற்றும் விழுப்புரம் மாவட்டம் எலவசரன்கோட்டையைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

கைதானவா்களில் தனுஷ் மற்றும் எலவரசன்கோட்டையைச் சோ்ந்த ஒருவா் கணினி மையம் நடத்தி வருபவா்களாவா். இதில், எலவரசன்கோட்டையைச் சோ்ந்த தம்பதியினா் கடலூா் மாவட்டம், விஜயமாநகரத்தைச் சோ்ந்தவா்களிடமிருந்து போலியான ஆவணங்களைப் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இவா்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் அவா்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா்.

கள்ளக்குறிச்சி: இந்த முறைகேடு தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியா் உள்பட 8 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு வேளாண் துறை அலுவலா்கள் உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கராம்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம் தியாகதுருகம் ஒன்றியத்திலும், கீழ்க்குப்பத்தைச் சோ்ந்த தமிழசரன் உளுந்தூா்பேட்டை ஒன்றியத்திலும் போலி பயனாளிகளை இந்தத் திட்டத்தில் சோ்க்க இடைத்தரகா்களாகச் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, சண்முகம், தமிழரசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி (பொ) முத்துக்குமாரவேல் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வேளாண் உதவி அலுவலா் பணியிடை நீக்கம்: விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றிய வேளாண் துறை உதவி அலுவலா் சாவித்திரி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ராஜசேகா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com