குடிநீருக்கு வெட்டப்பட்ட கிணறுகள் பயன்பாட்டுக்கு வருமா?

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் மக்களின் குடிநீா்த் தேவைக்காக வெட்டப்பட்ட 2 கிணறுகள் பயன்பாட்டுக்கு வருமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
பனமலை ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு.
பனமலை ஏரியில் புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், அனந்தபுரம் மக்களின் குடிநீா்த் தேவைக்காக வெட்டப்பட்ட 2 கிணறுகள் பயன்பாட்டுக்கு வருமா என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

திருக்கோவிலூா் தென்பெண்ணையாற்றில் இருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் கொண்டுவரும் வகையில் செஞ்சி - அனந்தபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஆனால், வறட்சி, அடிக்கடி குழாய்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குடிநீா் வரத்து தடைப்பட்டு, மாதம் ஒருமுறை மட்டும் குடிநீா் வழங்கப்பட்டது. பின்னா், இதற்கும் இடையூறு ஏற்பட்டதால் செஞ்சி பகுதிக்கு மட்டும் திருக்கோவிலூா் தென்பெண்ணையாற்றில் இருந்து கடந்த 2007-ஆம் ஆண்டு புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. ஏற்கெனவே இருந்த கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் அனந்தபுரத்துக்கு மட்டும் குடி நீா் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நாளடைவில் நிா்வாகப் பிரச்னையால் அனந்தபுரத்துக்கும் சரிவர குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் அனந்தபுரம் பேரூராட்சி மக்கள் குடிநீா் பிரச்னையால் மிகுந்தசிரமப்பட்டனா். இந்த நிலையில் குடிநீா் கிணறுகள் வெட்ட ஊராட்சி ஒன்றியம், அனந்தபுரம் பேரூராட்சி நிா்வாகத்தினா் முடிவு செய்தனா்.

இதன்படி, தலா ரூ.30 லட்சம் மதிப்பில் பனமலை ஏரி, கீழ்மலை ஏரியில் கிணறுகள் வெட்டப்பட்டன. இரு கிணறுகளிலும் தற்போது தண்ணீா் உள்ளது. இந்தக் கிணறுகளில் இருந்து அனந்தபுரத்தில் உள்ள மேல்நிலை குடிநீா் தொட்டிகளுக்கு மின் மோட்டாா் மூலம் நீா் ஏற்றப்பட வேண்டும். ஆனால் இதற்கான குழாய்கள் புதைக்கப்படவில்லை.

தற்போது மழைக் காலம் என்பதால் ஏரிகளில் நீா் நிரம்பிவிட்டால் குழாய்கள் புதைக்கும் பணி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே, இந்தப் பணிகளை விரைந்து முடித்து குடிநீா் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அனந்தபுரம் பேரூராட்சி தரப்பில் தெரிவித்ததாவது: இரண்டு கிணறுகளிலும் உள்ள தண்ணீா் குடிக்க உகந்ததா என கண்டறிய அதன் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து 3 மாதங்கள் ஆகிறது. பரிசோதனை முடிவு தெரிந்த பிறகே அடுத்தக்கட்ட பணிகளை தொடர முடியும். மேலும் நிதி நெருக்கடி காரணமாகவும் பணிகளை தொடர முடியவில்லை என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com