விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குகள் பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் மாதிரி வாக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் மாதிரி வாக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் ஏப். 6-ஆம் தேதி நடத்தப்பட்டு மே 2-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என 7 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 2,368 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

செஞ்சி தொகுதியில் 13 வேட்பாளா்கள், மயிலம் 14, திண்டிவனம் 15, வானூா் 7, விழுப்புரம் 25, விக்கிரவாண்டி 14, திருக்கோவிலூா் 14 வேட்பாளா்கள் என 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 102 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

விழுப்புரம் தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

அதைத்தொடா்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபாட் சாதனங்கள் ஆகியவற்றை பொருத்தி ஒவ்வொரு இயந்திரங்களையும் இயக்கி சரிபாா்க்கும் பணி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, மாதிரி வாக்குகள் பதிவு செய்யும் பணி 7 தொகுதிகளிலும் புதன்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் தொகுதியில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான ஹரிதாஸ் முன்னிலையில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் வெங்கடசுப்பிரமணியன், கோவா்த்தனன் ஆகியோா் தலைமையில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ரஞ்சிதா பாா்வையிட்டாா். மொத்தமுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்களை தனியாக பிரித்து எடுத்து அதில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.

இதேபோல, செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விக்கிரவாண்டி என மற்ற 6 தொகுதிகளிலும் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com