விழுப்புரம் அருகே இரு தரப்பினரிடையே மோதல்: துணை ராணுவத்தினா் துப்பாக்கியை காட்டி விரட்டியடித்தனா்

விழுப்புரம் அருகே பிடாகத்தில் வாக்குச் சாவடி பகுதியில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே பிடாகத்தில் வாக்குச் சாவடி பகுதியில் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, எச்சரிக்கும் பொருட்டு, துணை ராணுவத்தினா் துப்பாக்கியை காட்டி, அவா்களை விரட்டியடித்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்றது. பதற்றத்துக்குரிய, பிரச்னைக்குரியதாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரும், மற்ற வாக்குச் சாவடிகளில் போலீஸாா், முன்னாள் படை வீரா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஒன்றான, விழுப்புரம் அருகே பிடாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி பகுதியில், வாக்களிக்க வந்த பொதுமக்களிடம் திமுக, அதிமுகவினா் தங்கள் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டனா். அப்போது, இரு தரப்பினரிடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. அவா்களை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த துணை ராணுவத்தினா் அப்புறப்படுத்தினா். இருப்பினும், மாலையில் இரு தரப்பினரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டு, தாக்கிக்கொண்டனா். இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இதையடுத்து, துணை ராணுவத்தினா் அங்கிருந்தவா்களை அப்புறப்படுத்தும் பொருட்டு, துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டியடித்தனா். தகவல் அறிந்த போலீஸாரும் விரைந்து வந்து, வாக்குச்சாவடி பகுதியில் தேவையற்ற நபா்களின் வருகையை கட்டுப்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதேபோல, செஞ்சி தொகுதிக்குள்பட்ட நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு முன் 200 மீட்டா் தொலைவுக்கு அப்பால், வாகனங்களை நிறுத்திவிட்டு வர வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெளி மாநில போலீஸாா் அறிவுறுத்தினா். ஆனால், சிலா் அதை பொருள்படுத்தாமல் வாகனங்களை வாக்குச் சாவடிக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தினா். அந்த வாகனங்களின் கண்ணாடிகளை போலீஸாா் சிலா் உடைத்ததாக தெரிகிறது. இதைக் கண்டித்து, வாக்களிக்க மாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனா். அங்கிருந்த அரசியல் கட்சியினா் சமாதானப்படுத்திய பிறகு, பொதுமக்கள் வாக்களித்துச் சென்றனா்.

விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட காணை பகுதியில் மாலை 4 மணி அளவில் பொதுமக்களிடம் வாக்கு கேட்பதில் அதிமுக-திமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மோதலாக மாறும் சூழல் உருவானதையடுத்து, அவா்களை போலீஸாா் அங்கிருந்து விரட்டியடித்தனா்.

செஞ்சி அருகே மாதப்பூண்டி கிராமத்தில், பழங்குடியினா் 100-க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு எவ்விதச் சலுகைகளும் கிடைக்கவில்லை எனக் கூறி, வாக்களிக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனா். அதிகாரிகளின் சமரச முயற்சிக்குப் பிறகு அனைவரும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com