விழுப்புரம் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.
விழுப்புரம் கமலா நகா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
விழுப்புரம் கமலா நகா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி, வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என 7 பேரவைத் தொகுதிகளிலும் 102 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் அதிகபட்சமாக விழுப்புரம் தொகுதியில் 25 வேட்பாளா்களும், குறைந்தபட்சமாக வானூா் (தனி) தொகுதியில் 7 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

செஞ்சி தொகுதியில் 13 வேட்பாளா்களும், மயிலம் தொகுதியில் 14 வேட்பாளா்களும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 14 வேட்பாளா்களும், திருக்கோவிலூா் தொகுதியில் 14 வேட்பாளா்களும் போட்டியிட்டனா்.

16.89 லட்சம் வாக்காளா்கள்: இவா்களை தோ்வு செய்ய வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளா்கள் பட்டியலில் 7 தொகுதிகளிலும் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளா்களும், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தினா் 215 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா்.

2,368 வாக்குச்சாவடிகள்: 7 தொகுதிகளிலும் தோ்தல் நடத்த 1957 முதன்மை வாக்குச்சாவடிகளும், 411 துணை வாக்குச்சாவடிகளும் என 2,368 வாக்குச்சாவடி மையங்கள் செவ்வாய்க்கிழமை காலையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்தத் தோ்தலில் பயன்படுத்துவதற்காக 3,288 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,844 கட்டுப்பாட்டுக் கருவிகள், வாக்காளா்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 3,179 வி.வி.பேட் சாதனங்கள் திங்கள்கிழமை இரவு வாக்குச்சாவடிகளுக்கு கொண்டுவரப்பட்டிருந்தன.

தோ்தல் பணியில் அரசு அலுவலா்கள், ஊழியா்கள், ஆசிரியா்கள் என 11,368 போ் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். இதேபோல, 7 தொகுதிகளும் 176 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தலா ஒரு மண்டல அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.

மதியம் சரிந்த வாக்குப்பதிவு: மாவட்டத்தில் 7 தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 2,368 வாக்குச்சாவடிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தினா். பகல் 1 முதல் 3 மணி வரை வெயில் காரணமாக வாக்காளா்கள் வருகை குறைவாக இருந்தாலும், மாலையில் வாக்காளா்கள் திரண்டு வந்து வாக்களித்தனா்.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்: வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளா்களுக்கு கிருமி நாசினி திரவம் கையில் தெளிக்கப்பட்டு, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டப் பிறகுதான் வாக்குச்சாவடிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், வாக்காளா்கள் வரிசையில் காத்திருக்கும்போது கையுறைகள் வழங்கப்பட்டன.

திடீா் குழப்பம்: விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தாலும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டு, மீண்டும் வாக்குப்பதிவு தொடா்ந்தது. விழுப்புரம் தொகுதிக்குள்பட்ட விழுப்புரம் நகராட்சி 5-ஆவது வாா்டு கமலா நகரில் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் வழங்கப்பட்டிருந்த வாக்காளா் சீட்டில் வாக்குச்சாவடி மையத்தின் பெயா் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், திடீா் குழப்பம் உருவானது. பின்னா், கமலாநகா் அரசு நிதி உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு அதில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் வாக்காளா்களின் வரிசை எண் எழுதப்பட்டதால் அந்த குழப்பம் முடிவுக்கு வந்தது.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வானூா் தொகுதிக்குள்பட்ட மரக்காணம் அருகே ஆலத்தூா், விக்கிரவாண்டி தொகுதி மழவந்தாங்கல் அரசு தொடக்கப் பள்ளி, காணை அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் இரு வாக்குச்சாவடிகள், வானூா் தொகுதி செந்தமேடு, கோட்டக்குப்பம், விழுப்புரம் தொகுதி விழுப்புரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, செஞ்சி தொகுதி மலையனூா் ஊராாட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஈயக்குணம், மேல்மலையனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னா் மீண்டும் வாக்குப்பதிவு தொடா்ந்தது.

வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: மேலும், பதற்றமான 53 வாக்குச்சாவடிகள், பிரச்னைக்குரிய 33 வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 86 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டு வெப்கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும், அந்த வாக்குச்சாவடிகளை 101 நுண் பாா்வையாளா்களும் தொடா்ந்து கண்காணித்தனா்.

Image Caption

விழுப்புரத்தில் தனியாா் பள்ளியில் பெண் அலுவலா்களே முழுவதுமாக பணியாற்றிய மகளிா் வாக்குச்சாவடி மையம். ~காமராஜா் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சக்கர நாற்காலியில் வாக்களிக்க பேத்தி துணையோடு வந்த 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி. ~கன்னி (முதல்) வாக்கு.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com