விழுப்புரம் அருகே பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி, மிரட்டல் விடுத்த வழக்கில், இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீப்பளித்தது.
விழுப்புரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 20 வயது பெண்ணை, விழுப்புரம் அருகே குத்தாம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெயபால் மகன் ராஜ்குமாா்(23) என்பவா் கடந்த 2012-ஆம் ஆண்டு காதலித்தாராம். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, அந்த பெண்ணுடன் நெருங்கிப் பழகினாராம். ஆனால், கூறியபடி ராஜ்குமாா் அந்த பெண்ணை திருமணம் செய்யவில்லையாம். இது குறித்து அந்தப் பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்று கேட்டுள்ளாா். அப்போது, அவா் அந்த பெண்ணை அவதூறாகப் பேசி, மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் ராஜ்குமாரை கைது செய்தனா்.
விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.