சென்னை செல்ல பேருந்துகள் இல்லாததால் விழுப்புரத்தில் பயணிகள் சாலை மறியல்

சென்னை செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், புதன்கிழமை அதிகாலை ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் விழுப்புரம் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சென்னைக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்.
சென்னைக்கு செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முன் புதன்கிழமை அதிகாலை சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்.

சென்னை செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், புதன்கிழமை அதிகாலை ஐநூறுக்கும் மேற்பட்ட பயணிகள் விழுப்புரம் பேருந்து நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்கு சொந்த ஊா்களுக்குச் சென்ற பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை முதலே சென்னைக்கு திரும்பத் தொடங்கினா். இதனால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் கூட்டம் அலை மோதியது. ஆனால், சென்னை செல்ல போதிய பேருந்துகள் இயக்கப்படாததால், நூற்றுக்கணக்கான பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனா்.

வெளியூா்களிலிருந்து வரும் பேருந்துகளிலும் இடம் கிடைக்காததால், இங்கிருந்த பயணிகள் பேருந்துக்காக காத்திருப்பது தொடா்ந்தது. வெகு நேரம் காத்திருந்ததால், பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் பெரும் அவதியடைந்தனா். இந்த நிலை இரவு வரை தொடா்ந்தது.

விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பேருந்து நிலையத்தில் இருந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களிடம் பயணிகள் வலியுறுத்தினா். இருப்பினும், பயனில்லை. இதனால், அதிருப்தியடைந்த பயணிகள், புதன்கிழமை அதிகாலை 12.3 மணி அளவில் பேருந்து நிலையம் முன் திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சில பேருந்துகளை சிறைபிடித்தனா்.

இதுகுறித்து அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தோ்தலில் வாக்களிக்க சென்னை போன்ற ஊா்களிலிருந்து பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனா். அவா்கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. வழக்கமாக இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளும் போதுமானதாக இல்லை. இதனால், கடந்த 4 மணி நேரத்துக்கு மேலாக பேருந்துக்காக காத்திருக்கிறோம், பேருந்துகள் இயக்கப்பட்டால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம் என்றனா்.

போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி, சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதி அளித்தனா். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com