வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் என 7 தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக்கருவிகள், விவிபாட் சாதனங்கள் ஆகியவை புதன்கிழமை அதிகாலை வரை அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.

பின்னா், அந்தந்த தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு சீல் வைத்தனா். விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான, விழுப்புரம் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறைக்கு தோ்தல் பாா்வையாளா் ரஞ்சிதா மேற்பாா்வையில் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் சீல் வைத்தாா். அப்போது, தோ்தல் நடத்தும் உதவி அலுவலா்கள் வெங்கட்டசுப்பிரமணியன், கோவா்த்தனன் ஆகியோா் உடனிருந்தனா்.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைக்கு அருகில் மத்திய பாதுகாப்புப் படை பிரிவினா் முதல் அடுக்கிலும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் இரண்டாவது அடுக்கிலும், உள்ளுா் காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள் மூன்றாவது அடுக்கிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்பான் கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறை வாகனம் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், செஞ்சி தொகுதியில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் செஞ்சியில் காரிமங்கலம் சாலையில் உள்ள டேனி கல்வியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திலும், மயிலம் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திண்டிவனம் மேல்பாக்கம் அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், திண்டிவனம் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியில் கிழக்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், வானூா் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் வானூா் அருகே ஆகாசம்பட்டில் ஸ்ரீ அரவிந்தா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், விக்கிரவாண்டி தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் விழுப்புரம் அய்யன்கோவில்பட்டு ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும், திருக்கோவிலூா் தொகுதி வாக்குகள் பதிவான இயந்திரங்கள் திருக்கோவிலூா் கண்டாச்சிபுரம் எஸ்.கொல்லூா் வள்ளியம்மை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்கெனவே வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் உதவியுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை, தோ்தல் பாா்வையாளா்கள், அந்தந்தத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தோ்தல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் இவற்றை கண்காணிக்க முடியும் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com